வெளிப்படைத்தன்மை விவகாரம்: சட்டசபையில் பா.ஜனதா மெஜாரிட்டியை நிரூபித்தது எப்படி? சிவசேனா கேள்வி

“நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் பா.ஜனதா, 2014 தேர்தலுக்கு பின்னர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தது எப்படி?” என்று சிவசேனா கேள்வி எழுப்பியது.

Update: 2017-01-30 22:58 GMT
மும்பை,

“நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் பா.ஜனதா, 2014 தேர்தலுக்கு பின்னர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தது எப்படி?” என்று சிவசேனா கேள்வி எழுப்பியது.

தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி கோரேகாவில் பாரதீய ஜனதா சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவுடன் கூட்டணிவைக்கும் பட்சத்தில் குறைவான வார்டுகளில் பா.ஜனதா போட்டியிடுவதில் தனக்கு மனஉறுத்தல்கள் ஏதுமில்லை என்றும், அதேசமயம், நிர்வாக வெளிப்படைத்தன்மையில் எக்காரணம் கொண்டும் சமரசம் அடைய மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ‘வெளிப்படைத்தன்மை’ கருத்துக்கு சிவசேனா தலைவர் அனில் பரப் நேற்று கண்டனம் தெரிவித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிப்படைத்தன்மை எங்கே?

வெளிப்படைத்தன்மையில் சமரசம் அடைய மாட்டோம் என்று முதல்-மந்திரி தவறாக கூறுகிறார். இதற்கு முரணாக, முதல்-மந்திரியின் அரசு ஒளிபுகா தன்மை கொண்டது. வெளிப்படைத் தன்மை பற்றி பேசும், பா.ஜனதா அரசு இன்னமும் மைனாரிட்டி அரசு தான்.

2014 சட்டசபை தேர்தலுக்கு பின்னர், அது எப்படி மெஜாரிட்டியை நிரூபித்தது என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை. அப்போதெல்லாம் உங்களது வெளிப்படைத்தன்மை எங்கே சென்றது?. இந்த அரசு அதன் அடிமட்ட அளவில் இருந்தே, வெளிப்படைத்தன்மை கொண்டது அல்ல.

மும்பை மாநகராட்சியின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் அவர்கள், அதனை மத்தியிலும், மாநிலத்திலும் முதலில் கடைப்பிடிக்கட்டும்.

நாக்பூரில் ஊழல்

முதல்-மந்திரியின் சொந்த ஊரான நாக்பூரில் மோசமான சாலை மற்றும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. அதிகரிக்கும் குற்ற விகிதத்தால் பொதுமக்கள் பீதியில் இருக்கின்றனர். நாக்பூரில் மாபெரும் சிமெண்டு ஒப்பந்த ஊழலும் நிகழ்கிறது. இதன் மீது ஏற்கனவே பல முறை விசாரணை நடத்த கோரியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அனில் பரப் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்