வேலூர் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் நடந்த 3,245 சாலை விபத்துகளில் 878 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2016–ம் ஆண்டு 3,245 விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

Update: 2017-02-03 20:45 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2016–ம் ஆண்டு 3,245 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதில் 878 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகள்

நாடு முழுவதும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப விபத்துகளும் நடக்கிறது. வாகனங்களின் அதிகரிப்பால் சாலை வசதியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு நகர பகுதிகளிலும் அதிக அளவில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துகளிலானால் உயிரிழப்புகள் ஏராளமாக நடக்கிறது. அதில் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 245 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 825 விபத்துகள் மனித உயிர் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 825 உயிரிழப்பு விபத்துகளில் 878 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறியதாவது:–

கடந்த ஆண்டு 878 பேர் உயிரிழப்பு

அதற்கு முந்தய ஆண்டுகளை ஒப்பிடும் போது சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது காரணம் ஆகும். பொதுமக்களிடையே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் குறித்த விழிப்புணர்வு மாவட்ட காவல் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2014–ம் ஆண்டு 3 ஆயிரத்து 309 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 793 உயிரிழப்பு விபத்துகளில் 862 பேர் உயிரிழந்துள்ளனர். 2015–ம் ஆண்டு 3 ஆயிரத்து 276 விபத்துகளும் அதில் 718 உயிரிழப்பு விபத்துகளில் 766 பேர் உயிரிழந்துள்ளனர். 2016–ம் ஆண்டு 3 ஆயிரத்து 245 விபத்துகள் நடந்துள்ளன. அதில் உயிரிழப்பு 825 விபத்துகளில் 878 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடந்த விபத்துகளை ஆய்வு செய்த போது ஒரு சில இடங்களில் அதிகப்படியாக விபத்துகள் நிகழ்ந்துள்ளன. எனவே அந்த இடங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விபத்துகளில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவது இரு சக்கர வாகனங்களால். எனவே இரு சக்கர வாகனம் ஓட்டும் இளைஞர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். வேகத்தை தவிர்க்க வேண்டும்.

டி.வி.க்கள் மூலம் விழிப்புணர்வு

கடந்த ஆண்டு விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளனர். காவல் துறை சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெரிய அளவிலான டி.வி.க்கள் வைக்கப்பட்டு அதில் சாலை விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி வாசகங்கள், படங்கள் ஒளிபரப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வேலூர் மக்கான் சிக்னலில் வைக்கப்பட்டுள்ள டி.வி. பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்று பல முக்கிய இடங்களில் டி.வி.க்கள் வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்