கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரே‌ஷன்அரிசி பறிமுதல்

மதுரையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரே‌ஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-02-03 22:15 GMT

திண்டுக்கல்,

மதுரையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரே‌ஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ரே‌ஷன்அரிசி கடத்தல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக திண்டுக்கல் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் பழனி அருகே உடுமலைபேட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் வேகமாக வந்த லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரியில் ரே‌ஷன் அரிசி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து லாரி டிரைவரான கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவூரை சேர்ந்த உன்னிக்குட்டி (வயது 52), கிளீனர் முகமது அனீபா (45) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

6 பேர் கைது

அதில் தமிழ்நாட்டில் ரே‌ஷன்கடையில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை, கேரளாவிற்கு கொண்டு சென்றால் நல்ல விலைக்கு விற்கலாம். எனவே, மதுரை பகுதியில் ரே‌ஷன்கடையில் இருந்து அரிசி வாங்கி செல்லும் மக்களிடம் விலை கொடுத்து வாங்கி, ஒரு கும்பல் மொத்தமாக பதுக்கி வைத்து, பின்னர் அவற்றை லாரியில் ஏற்றி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற போது பிடிபட்டது தெரியவந்தது.

இதையடுத்து லாரி மற்றும் அதில் கடத்தி வரப்பட்ட 14 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து திண்டுக்கல் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உன்னிக்குட்டி, கிளீனர் முகமதுஅனீபா, மதுரை அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த மாரி (43), தங்கபாண்டி (44), கணேசன் (37), சக்திவேல் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட 14 டன் ரே‌ஷன் அரிசி, குடிமை பொருள் வழங்கல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்