மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் காங். மண்டல ஒருங்கிணைப்பாளர் பேச்சு

‘மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்’ என்று காங்கிரஸ் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

Update: 2017-02-15 22:30 GMT

கோவை

‘மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்’ என்று காங்கிரஸ் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.மஞ்சுநாத் கூறினார்.

கருத்தரங்கம்

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ‘உயர் பண மதிப்பு நீக்கத்தினால் மக்கள் படும் வேதனை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் திவ்யோதயா ஹாலில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட தலைவர் கே.எஸ்.மகேஷ்குமார் வரவேற்றார். கருத்தரங்கில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.மஞ்சுநாத் பேசியதாவது:–

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் நசிந்து விட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் தொழில் நகரங்களில் மக்கள் வேலையில்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

போராட்டங்கள்

எனவே ரூபாய் நோட்டு செல்லாது என்பன போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்து பொது மக்களிடம் எடுத்து சொல்வதற்காக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்வதற்கு காங்கிரசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கே.எம்.எஸ். பாண்டியன், எம்.ஜோதி, மாநில துணைதலைவர் எம்.என்.கந்தசாமி, மாநில பொதுச்செயலாளர் மயூரா ஜெயக்குமார், ஏ.ஆர்.சின்னையன், கணபதி சிவக்குமார், பி.எஸ்.சரவணக்குமார், எம்.சின்னராஜ், டி.எஸ். ராஜாமணி, கவிதா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.பி.கே. கணேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்