உஷாரய்யா உஷாரு..

அந்த சிறுமி நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். பள்ளியில் இசை, நடனம், விளையாட்டு போன்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்துக் கொண்டிருந்தாள்.

Update: 2017-02-19 10:54 GMT
ந்த சிறுமி நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். பள்ளியில் இசை, நடனம், விளையாட்டு போன்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்துக் கொண்டிருந்தாள். அழகும், சுறுசுறுப்பும் அவளது திறமையை கூடுதலாகவே மெருகேற்றின.

அவளது அம்மாவும் நல்ல அழகு. நேர்த்தியாக, மிகுந்த அழகுடன் உடை உடுத்துவாள். அவளது பேச்சு, பழக்கவழக்கம் எல்லாவற்றிலும் ‘ஸ்டைல்’ மிளிரும். சிறுமியின் தந்தை சுயதொழில் செய்து கொண்டிருக்கும் கடுமையான உழைப்பாளி. அவர் நடை, உடையில் நேர்த்தியிருக்காது. தனது நிறுவனத்து வேலைகளை எல்லாம் அவர் தலைக்கு மேல் இழுத்துப்போட்டு செய்வதால், இரவில் வெகுநேரம் கழித்தே வீடு திரும்புவார்.

துறுதுறுவென்று உற்சாகமாக செயல்பட்டுக்கொண்டிருந்த அந்த சிறுமி திடீரென்று, உற்சாகமிழந்து காணப்பட்டாள். படிப்பில் மந்தமானாள். பள்ளியில் நடைபெறும் கலைவிழாக்களில் ஆளுக்கு முன்னதாக போய் பெயர் கொடுக்கும் அவள், அவைகளில் தனக்கு ஆர்வமில்லை என்று பின்வாங்கினாள். அவளிடம் ஏற்பட்ட மாற்றங்களை கூர்ந்து கவனித்த வகுப்பு ஆசிரியை, மாற்றங்களுக்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் தாயாரிடம் இன்னொருவிதமான தவிப்பு தொற்றிக் கொண்டிருந்தது. தாயாரின் ஆபரணங்கள் எல்லாம் அறுத்து, உடைத்து அள்ளி வெளியே வீசப்பட்டிருந்தது. யார் அதை செய்தது? என்று தெரியாமல் அவள் குழம்பிக் கொண்டிருக்க, அடுத்த சில நாட்களில் அவளது மேக்கப் சாதனங்கள் எல்லாம் குப்பையில் வீசி சிதைக்கப்பட்டிருந்தன.

யார் அதை எல்லாம் செய்துகொண்டிருப்பது என்று கண்டுபிடிப்பதற்குள், அவளது விலை உயர்ந்த புடவைகள் எல்லாம் கீறி சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்தன.

ஒன்றன்பின் ஒன்றாக நடந்த அவை அனைத்தையும் பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார், அவை அனைத்தையும் செய்தது மகள்தான் என்பதை கண்டுபிடித்ததும் கதிகலங்கிப்போனாள்.

மகளிடம் அவ்வளவு ஆக்ரோ‌ஷமான வன்முறை எண்ணம் தலைதூக்க, பள்ளியில் நடந்த ஏதாவது சம்பவம்தான் காரணமாக இருக்கும் என்று நினைத்த தாயார், அவளது வகுப்பு ஆசிரியையை தொடர்பு கொண்டு, வீட்டில் நடந்த அசம்பாவிதங்களை எல்லாம் சொன்னார்.

அதை கேட்ட ஆசிரியை கவலையோடு, ‘அவளிடம் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது எனக்கும் தெரியும். அதற்கு உங்கள் வீட்டில் நடக்கும் சம்பவம் ஏதாவது காரணமாக இருக்குமோ என்று நான் நினைத்தேன். இனியும் தாமதிக்க முடியாது. நானே அவளிடம் பேச வேண்டிய முறையில் பேசி காரணத்தை கண்டுபிடிக்கிறேன்’ என்றார்.

சொன்னபடியே பக்குவமாக அந்த சிறுமியிடம் பேசி, காரணத்தை கண்டுபிடித்து விட்டார்.

சிறுமி, தனது ஆசிரியையிடம் மனம் விட்டுப்பேசிய உண்மை இதுதான்:

‘அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில்  ஒரு அங்கிள் வீட்டுக்கு வருவாங்க. அவங்க, ‘உங்க அழகுக்கு பொருத்தமே இல்லாத அவரை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு’ கேட்பாங்க! அம்மாவின் அழகை ரொம்ப வர்ணிப்பாங்க..! அம்மாவும், அவரும் நடந்துக்கிற முறை எதுவும் எனக்கு பிடிக்கலை. அம்மாவின் அழகுதானே அதுக்கெல்லாம் காரணம். அதனாலதான் அம்மாவை அழகாக காட்டுகிற எல்லாத்தையும் அள்ளி வீசினேன்.. அலங்கோலப்படுத்தினேன்’ என்றாள்.

இந்த உண்மையை அவளது தாயிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல், அந்த ஆசிரியை  தவித்துக் கொண்டிருக்கிறார்!

– உஷாரு வரும்.

மேலும் செய்திகள்