ஆவடி பகுதியில் பாண்டியராஜன் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

ஆவடி பகுதியில் பாண்டியராஜன் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை மற்றும் மாலை அணிவித்தும் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.

Update: 2017-02-19 22:45 GMT
பொதுமக்கள் வரவேற்பு

அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்று உள்ள ஆவடி சட்டமன்ற உறுப்பினர் க.பாண்டியராஜன், நேற்று திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், ஆவடி பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்தார்.

சசிகலா அணியில் இடம்பெற்று இருந்த அவர், தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்றவாறு ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறி அவருக்கு ஆதரவாக செயல்பட்டார்.

இதற்காக பாண்டியராஜன் எம்.எல்.ஏ.வை ஆவடி பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் திரளான பொதுமக்கள் அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து தங்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

பின்னர் பாண்டியராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–

நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மயுத்தம் தொடங்கி உள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது. அதற்கு சட்ட அனுமதி இருக்காது.

தமிழகமும், அ.தி.மு.க.வும் ஒரு குடும்ப ஆட்சிக்குள் செல்லாமல் தொண்டர்கள் எழுச்சியுடன் செயல்பட வேண்டும். ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பாக ஒரு நல்ல முடிவு வரும் என எதிர்நோக்கி உள்ளோம். கவர்னர் ஆட்சி மற்றும் இடைத்தேர்தலை மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் முறையான அரசாங்கம் விரைவில் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்