திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் மீண்டும் கரை ஒதுங்கிய டீசல் படிமத்தை அகற்றும் பணி தீவிரம்

திருவொற்றியூர், எண்ணூரில் கடற்கரை பகுதியில் மீண்டும் கரை ஒதுங்கிய டீசல் படிமத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2017-02-19 22:46 GMT
கப்பல்கள் மோதல்

எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த மாதம் 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டி பரவியது. தாழ்வான பகுதியான திருவொற்றியூர் பாரதியார் நகர் கடல் பகுதியில் அதிக அளவில் டீசல் படிமம் கரை ஒதுங்கியது.

இந்த டீசல் படிமத்தை 13 நாட்கள் போராடி அகற்றினர். மொத்தம் 100 டன்னுக்கு மேல் கடலில் இருந்து டீசல் படிமம் அகற்றப்பட்டது. கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டு உள்ள பாறைகளில் படிந்த டீசல் படிமமும் தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

மீண்டும் கரை ஒதுங்கியது

ஆனால் அதன் பிறகு காற்றின் வேகத்தால் கடலில் பிரிந்து கிடந்த டீசல் படிமம் மீண்டும் திருவொற்றியூர் பாரதியார் நகர், ராமகிருஷ்ணாநகர், நெட்டுக்குப்பம், பெரியகுப்பம், கே.வி.கே.குப்பம், எண்ணூர், நேதாஜி நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி உள்ளது.

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் பகுதிகளில் டீசல் படிமம் கரை ஒதுங்கி வருவதால் அவர்களால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதனால் மீனவர்களின் வலை, பைபர் படகுகள் சேதம் அடைவதால் டீசல் படிமத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அகற்றும் பணி தீவிரம்

இதையடுத்து திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கரை ஒதுங்கி உள்ள டீசல் படிமத்தை அகற்றும் பணியில் அந்த பகுதி மீனவர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் சென்னை மாநகராட்சி ஊழியர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

டீசல் படிமத்தை அகற்றும் பணி ஒருபுறம் நடந்து கொண்டு இருந்தாலும், காற்றின் திசைக்கு ஏற்ப அவ்வப்போது மீண்டும் டீசல் படிமம் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகிறது. அவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்