சென்னை எண்ணூரில் 3 வயது சிறுமி கடத்திக்கொலை; குப்பை தொட்டியில் உடல் வீச்சு

சென்னை எண்ணூரில் 3 வயது சிறுமி கடத்திக்கொலை; குப்பை தொட்டியில் உடல் வீச்சு நகைக்காக கொலையா? போலீஸ் விசாரணை

Update: 2017-02-19 23:00 GMT

திருவொற்றியூர்,

சென்னை எண்ணூரில் மாயமான 3 வயது சிறுமி, கொலை செய்யப்பட்டு குப்பை தொட்டியில் உடல் வீசப்பட்டது. நகைக்காக சிறுமியை கடத்தி கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுமி மாயம்

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 26–வது பிளாக்கில் வசித்து வருபவர் பழனி. மீனவரான இவர், பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி. இவர்களது மகன் பாலா(12). இவர்களுக்கு 3 வயதில் ரித்திகா என்ற மகளும் இருந்தாள்.

நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்த ரித்திகா, திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர், அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி ரித்திகாவை காணவில்லை.

இது தொடர்பாக எண்ணூர் போலீசில் பழனி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

குப்பை கிடங்கில் பிணம்

இந்தநிலையில் நேற்று காலை திருவொற்றியூர்–மணலி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் 3–வது வார்டு குப்பை கொட்டும் பகுதியில் குப்பை லாரி ஒன்று குப்பைகளை கொட்டியது. அங்கிருந்த சில பெண்கள், அந்த குப்பைகளை கிளறி அதில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில், பேப்பர்களை பொறுக்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது குப்பைகளுக்கு நடுவே ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அலறினர். இதுபற்றி குப்பை லாரி டிரைவர் உடனடியாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர்.

அதில் சிறுமியின் வாய்க்குள் துணி திணிக்கப்பட்டு இருந்ததுடன், வாயும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. அவளது தலையின் பின்பகுதியில் ரத்தம் வடிந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுப்புற பகுதிகளில் சிறுமி யாராவது மாயமாகி உள்ளனரா? என போலீசார் விசாரித்தனர்.

பெற்றோர் அடையாளம் காட்டினர்

அதில் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி ரித்திகா மாயமாகி இருப்பதாக புகார் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. உடனடியாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரித்திகாவின் பெற்றோருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சிறுமியின் உடலை பார்த்த பழனி மற்றும் கலைவாணி இருவரும் பிணமாக கிடப்பது தங்கள் மகள்தான் என்று அடையாளம் காட்டினர். மகளின் உடலை பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சாலை மறியல்

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை கமி‌ஷனர்கள் ராஜேந்திரன், ஜெயக்குமார், உதவி கமி‌ஷனர் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலையான சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சிறுமி பிணமாக கிடந்த தகவல் அறிந்ததும் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 150–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த பகுதியில் மணலி விரைவு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த எண்ணூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘‘சிறுமி ரித்திகா கடைசியாக அவளது எதிர் வீட்டில் வசிக்கும் ரேவதி வீட்டுக்கு சென்ற பிறகுதான் மாயமானாள். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மணலி விரைவு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகைக்காக கொலையா?

இந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் எதிர் வீட்டில் வசிக்கும் ரேவதி என்ற பெண்ணை பிடித்து விசாரித்து வருகின்றனர். சிறுமியின் கழுத்தில் தங்க சங்கிலி, காதில் கம்மல், இடுப்பில் வெள்ளி கொடி, காலில் வெள்ளி கொலுசு அணிந்து இருந்ததாக தெரிகிறது.

ஆனால் பிணமாக கிடந்த சிறுமியின் உடலில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணவில்லை. எனவே நகைக்காக சிறுமியை கடத்தி, அவள் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணி வைத்து திணிந்து, வாயை கட்டி அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

பின்னர் நகைகளை கழற்றி விட்டு சிறுமியின் உடலை அங்குள்ள குப்பை தொட்டியில் வீசி உள்ளனர். குப்பை தொட்டியில் சிறுமி உடல் கிடப்பது தெரியாமல் குப்பை லாரி குப்பையை ஏற்றிக் கொண்டு குப்பை கிடங்கில் கொட்டிய போது, பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கிய பெண்கள் பார்த்ததால் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனவே சிறுமி நகைக்காகத்தான் கொலை செய்யப்பட்டாளா? அல்லது பழனியுடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் மர்ம கும்பல் அவளை கடத்தி கொலை செய்தனரா? அல்லது பாலியல் தொல்லையில் சிறுமி கொலை செய்யப்பட்டாளா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்