ரூ.10 கோடி அபராதம் கட்ட தவறினால் சசிகலா மேலும் 13 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்

ரூ.10 கோடி அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா மேலும் 13 மாதங்கள் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்று பெங்களூரு மத்திய சிறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-22 00:00 GMT

பெங்களூரு,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

4 ஆண்டுகள் சிறை தண்டனை

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி கோர்ட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 13 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

மத்திய சிறையில் சாதாரண கைதிகளாக உள்ள இவர்களுக்கு உணவு தட்டு, சிறை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மகளிர் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்காக மகளிர் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி பெட்டி

சுதாகரன் ஆண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளார். அவருடைய பாதுகாப்புக்கும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற கைதிகளுக்கு வழங்குவது போல் இவர்களுக்கும் சிறை உணவே வழங்கப்படுகிறது. சிறை டாக்டர்கள் மூலம் அவர்களின் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது.

பொழுதுபோக்கிற்காக மற்ற கைதிகளை போல் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சாதாரண கைதிகளை போல் சிறையில் உள்ளனர். சிறை விதிமுறைகளின்படியே அவர்கள் நடத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் மந்திரிகள்

பெங்களூரு தனி கோர்ட்டு தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியதை அடுத்து சசிகலா ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த நிலையில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக முன்னாள் மந்திரிகள் வளர்மதி, கோகுல இந்திரா, அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் சிறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்