இறந்து போனதாக நினைத்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம் உயிருக்கு 48 மணி நேரம் டாக்டர் கெடு

தார்வார் தாலுகாவில் இறந்து போனதாக நினைத்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்து உள்ளது. ஆனாலும் அந்த சிறுவனின் உயிருக்கு 48 மணி நேரம் டாக்டர் கெடு விதித்து உள்ளார்.

Update: 2017-02-21 22:53 GMT

உப்பள்ளி,

நாய் கடித்தது

தார்வார் தாலுகா மணகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் சுத்திராயா(வயது 16). இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் சம்பவத்தன்று சுத்திராயா பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தான். அப்போது அவனை தெருநாய் ஒன்று கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் தெருநாயிடம் இருந்து சுத்திராயாவை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சுத்திராயாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவனை மீட்டு குடும்பத்தினர் சிகிச்சைக்காக தார்வார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுத்திராயாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் சுத்திராயாவை காப்பாற்ற முடியாது, அவனை வீட்டிற்கு அழைத்து சென்று விடுங்கள் என்று கூறியுள்ளனர்.

உயிர் பிழைத்தான்

இதையடுத்து சுத்திராயாவை அவனது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுத்திராயாவின் உடலில் எந்தவித அசைவும் இல்லை. இதனால் சுத்திராயா இறந்து விட்டதாக நினைத்து அவனது பெற்றோரும், உறவினர்களும் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.

இறுதிச் சடங்கின்போது சுத்திராயாவிற்கு அவனது உறவினர் ஒருவர் மாலை அணிந்து கொண்டு இருந்தார். அப்போது சுத்திராயா திடீரென எழுந்து அமர்ந்தார். இதனை பார்த்து அவனது உறவினர்கள் அதிர்ச்சியும், அதே வேளையில் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஆனால் அவன் எழுந்த சிறிது நேரத்தில் மறுபடியும் மயங்கி விழுந்தான்.

இதையடுத்து அவனை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

48 மணி நேரம் கெடு

இந்த நிலையில் நேற்று காலை சுத்திராயாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டரான மகாந்தேஷ் கூறுகையில், சுத்திராயா உயிர் பிழைத்தது அதிசயம் தான். ஆனாலும் அவன் இன்னும் அபாய கட்டத்தில் தான் உள்ளான். இன்னும் அவனது உயிருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த 48 மணி நேரத்தில் அவனுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவனுக்கு நாங்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

மேலும் செய்திகள்