மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணை கலெக்டர் சம்பத் வழங்கினார்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் சம்பத் வழங்கினார்.

Update: 2017-02-27 23:15 GMT

சேலம்,

உதவித்தொகை ஆணை

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

நேற்று மொத்தம் 297 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளி இருக்கைக்கு நேரடியாக சென்று கலெக்டர் சம்பத் மனு வாங்கினார். மேலும், இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், விதவைகள் உள்பட 16 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் சம்பத் வழங்கினார்.

சாலையை சீரமைக்க வேண்டும்

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்த பலர் கலெக்டரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில், ‘சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 37–வது வார்டில் உள்ள மாருதி நகரில் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள்

தமிழ்ச்சாலை பண்பாட்டுக் கழகம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், ‘சங்ககிரி–ஓமலூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டுக்கு 50–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர். பல கனரக வாகனங்கள் சுங்க கட்டண சாலையை தவிர்ப்பதற்காக கொங்கணாபுரம், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, ஓமலூர் ஆகிய சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த சாலைகளில் அதிக விபத்துகள் நடக்கிறது. இதை தடுக்க கனரக வாகனங்களை நெடுஞ்சாலை வழியாக மட்டும் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் கலெக்டர் சம்பத்திடம் கொடுத்துள்ள மனுவில், ‘சேலம் மாவட்ட எல்லை பகுதிக்குள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டவர்களை கொண்டாடும் விதமாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்