ஊரைவிட்டு காலி செய்யுமாறு மிரட்டல்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கணவன்–மனைவி தீக்குளிக்க முயற்சி

ஊரைவிட்டு காலி செய்யுமாறு மிரட்டுவதாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கணவன்–மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-02-27 23:30 GMT

சேலம்,

தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமையில் நடந்தது. சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 62). இவர் நேற்று காலை தனது மனைவி மணியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவர்கள் இருவரும் ஒரு கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்தவுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஊரைவிட்டு காலி செய்யுமாறு மிரட்டல்

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘நாங்கள் சமீபத்தில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டோம். இந்தநிலையில் எங்களிடம் கோவில் திருவிழாவிற்காக சிலர் ரூ.4 ஆயிரம் வரை வரி கேட்டனர். இதை கொடுக்க மறுத்தபோது, அவர்கள் எங்களை தாக்கினர்.

மேலும் அவர்கள், எங்களை ஊரை விட்டு காலி செய்யுமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்