இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தஞ்சையில் தாசில்தார் அலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-02-27 23:00 GMT
தஞ்சாவூர்,

முற்றுகை போராட்டம்

தஞ்சை நகர அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவி கலைச்செல்வி, மாநகர செயலாளர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வீட்டுமனை பட்டா

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 5 ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக தஞ்சை மாநகர ஏழை, எளிய மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் வீட்டுமனை பட்டா தருவதாக பலமுறை வாக்குறுதி அளித்தும் பட்டா வழங்காமல் இழுத்தடிக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து தாசில்தார் குருமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்