வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது

நீலகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 2,596 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ.60 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கர் தெரிவித்தார்.

Update: 2017-02-27 22:45 GMT
கடும் வறட்சி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள், புற்கள், சிறு தாவரங்கள் வேகமாக கருகி வருகின்றன. மேலும் வனப்பகுதிகள் பசுமை இழந்து வருவதால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த வறட்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள நிவாரண தொகை குறித்து கலெக்டர் சங்கர் கூறியதாவது:–

ரூ.60 லட்சம் நிவாரண தொகை

நீலகிரியில் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 596 விவசாயிகள் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வறட்சி நிவாரண தொகையாக முதற்கட்டமாக ரூ.60 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கு சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும்.

கிராமப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.11 கோடி செலவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொட்டலிங்கி, பூதநத்தம், வாழைத்தோட்டம், சொக்கநள்ளி ஆகிய ஆதிவாசி கிராமங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சிகளில் உள்ளவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உள்ளாட்சிகளின் அனுமதியை பெற்று ஆழ்துளை கிணறு அமைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்