வனப்பகுதியில் குடிநீர் இல்லாததால் ஊருக்குள் புகுந்து வரும் வனவிலங்குகள்

கூடலூர் வனப்பகுதியில் குடிநீர் இல்லாததால் ஊருக்குள் புகுந்து வரும் வனவிலங்குகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-02-27 22:15 GMT
வனவிலங்குகள்

தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதிகளான வண்ணாத்திப்பாறை, பளியன்குடி, மங்களதேவி பீட், அத்தியூத்து, மாவடி, வட்டதொட்டி, எள்கரடு ஆகிய பகுதிகளில் ஏராளமான விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் இங்கு யானை, மான், கரடி, காட்டுப்பன்றிகள், குரங்குகள் உள்பட பல்வேறு வனவிலங்குகளும் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வனப்பகுதிகளில் மழைக்காலங்களில் மட்டும் விலங்குகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்கிறது. ஆனால் கோடைக்காலங்களில் வெப்பம் அதிகரிப்பதால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் வற்றி விடுகிறது. மேலும் புற்களும் காய்ந்து விடுவதால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

ஊருக்குள் வரும் விலங்குகள்

தற்போது மழை இல்லாததால் கூடலூர் வனப்பகுதியில் விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் இரையை தேடி ஊருக்குள் வரத் தொடங்கி உள்ளன. இந்த விலங்குகளை சிலர் வேட்டையாடும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வனப்பகுதியில் உள்ள குடிநீர் குட்டைகளில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்