கழிவுநீர் கொட்டுவதால் மாசடையும் கொரட்டூர் ஏரி

கழிவுநீர் கொட்டுவதால் கொரட்டூர் ஏரி மாசடைகிறது. சுற்றுலா பூங்கா அறிவிப்பு என்ன ஆயிற்று என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Update: 2017-03-04 23:00 GMT
சென்னை,

கழிவுநீர் கொட்டுவதால் கொரட்டூர் ஏரி மாசடைகிறது. சுற்றுலா பூங்கா அறிவிப்பு என்ன ஆயிற்று என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கொரட்டூர் ஏரி

சென்னை நகரையொட்டி 850 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கொரட்டூர் ஏரி. 1970-ம் ஆண்டுகளில் இந்த ஏரியை அப்பகுதியை சுற்றி உள்ள அக்ரகாரம், எல்லை அம்மன் நகர், சாரதா நகர், கண்டிகை, சீனிவாசபுரம், காந்தி நகர் உள்பட பகுதிகளை சேர்ந்த மக்கள் குடிநீருக்காகவும், மற்ற தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் அப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கப்பட்டதால் கொரட்டூர் ஏரி தனித்தன்மை இழந்து கூவம் போன்று காட்சியளித்தது. ஆக்கிரமிப்புகளும் அரங்கேற தொடங்கின.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், கொரட்டூர் பகுதி பொதுநல சங்க அறக்கட்டளை நிர்வாகிகளும் ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். ஏரியில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இதில் பலன் கிடைக்காததால் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்வு கிடைத்தது. இதையடுத்து கொரட்டூர் ஏரியில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது.

படகு சவாரி, சுற்றுலா பூங்கா

பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் கொரட்டூர், ரெட்டேரி, அம்பத்தூர் ஆகிய 3 ஏரிகளும் படகுசவாரி, நடைபயிற்சி வளாகத்துடன் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.20 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஏரிகளிலும் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கின.

ஆனால் அந்த ஆண்டு ஏற்பட்ட மழை-வெள்ள பாதிப்பால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன.

இந்தநிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி, கொரட்டூர் ஏரியில் லாரிகள் மூலம் கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கொரட்டூர் ஏரி மீண்டும் மாசடைந்து வருகிறது.

மக்கள் கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் கூறியதாவது:-

அம்பத்தூர் நகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் என்று கைமாறி தற்போது கொரட்டூர் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனாலும் இந்த ஏரியை பாதுகாப்பதற்காக முயற்சிகளை நாங்கள் தான் மேற்கொண்டு வருகிறோம்.

சுற்றுலா பூங்கா அறிவிக்கப்படும் என்று அறிவித்து 2 ஆண்டுகளாகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கொரட்டூர் ஏரி மீண்டும் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 
Show comments

மேலும் செய்திகள்