தி.மு.க.வுடன் கை கோர்த்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

தி.மு.க.வுடன் கை கோர்த்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்

Update: 2017-03-07 23:15 GMT

 நாமக்கல்,

உற்சாக வரவேற்பு

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து திருச்சிக்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க கார் மூலம் நாமக்கல் வழியாக சென்றார். அவருக்கு நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் பூங்கா சாலையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:–

முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார். இருப்பினும் அவரது ஆட்சி தொடர்ந்து நடந்திட நான் முதல்–அமைச்சராக பொறுப்பேற்று உள்ளேன். உங்கள் பகுதிக்கு 2 அமைச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளனர். நாங்கள் இந்த பகுதியை வளமானதாக மாற்றவும், ஜெயலலிதாவின் அரசை காப்பாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

பாடம் புகட்ட வேண்டும்

அதே வேளையில் சில அரசியல் வாதிகள் இந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து விட்டு, தற்போது இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என துடிக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தாரோ, அத்தனை திட்டங்களையும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும், மக்களுக்கு நன்மையை செய்யும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒருசிலர் இந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று தி.மு.க.வுடன் கை கோர்த்து கொண்டு, இந்த இயக்கத்தை அழிக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மலர்தூவி மரியாதை

முன்னதாக விழா மேடைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், முன்னாள் எம்.பி. அன்பழகன், மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ். காளியப்பன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், முன்னாள் ஒன்றியகுழு துணை தலைவர் ராஜா மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒவ்வொருவராக முதல்–அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மலர்கொத்து கொடுத்து வரவேற்று, கோரிக்கை மனுவை முதல்–அமைச்சரிடம் வழங்கினார்.

அலங்கார வளைவுகள்

முதல்–அமைச்சர் வருகையை முன்னிட்டு, அவரை வரவேற்கும் வகையில் நாமக்கல்லில் பல்வேறு இடங்களில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தன. வாழை மரங்களும், அ.தி.மு.க. கொடிகளும் கட்டப்பட்டு நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. இதையொட்டி போக்குவரத்தில் சிறிய அளவில் போலீசார் மாற்றம் செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

முன்னதாக நாமக்கல் நகருக்கு வருகை வந்த முதல்–அமைச்சரை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் செய்திகள்