அரூரில் விபத்து இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

அரூரில் விபத்து இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Update: 2017-03-07 23:00 GMT

அரூர்,

2 பேர் சாவு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டையை சேர்ந்தவர் சின்னப்பன். இவருடைய மனைவி சவுரியம்மாள் (வயது 55). இவர் 2013–ம் ஆண்டு அரூர்–டி.அம்மாபேட்டைக்கு அரசு பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் இருந்து சவுரியம்மாள் இறங்கிய போது கீழே விழுந்து இறந்தார்.

இதேபோல் அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜி. இவருடைய மனைவி நாகம்மாள் (62). இவர் கடந்த 2009–ம் ஆண்டு கோட்டப்பட்டியில் இருந்து அரூருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய போது நாகம்மாள் கீழே விழுந்து இறந்தார். இந்த 2 விபத்துகள் தொடர்பான வழக்குகள் அரூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த 2 வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம், விபத்தில் உயிரிழந்த சவுரியம்மாள் குடும்பத்திற்கு விபத்து இழப்பீடு தொகையாக ரூ.4 லட்சத்து 70 ஆயிரமும், நாகம்மாள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்து 13 ஆயிரமும் வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுபடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

2 பஸ்கள் ஜப்தி

இதையடுத்து மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சவுரியம்மாள் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 93 ஆயிரமும், நாகம்மாள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்து 21 ஆயிரமும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து அரூர் வழியாக செல்லும் 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி அரூரில் 2 அரசு பஸ்களை ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

மேலும் செய்திகள்