உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்ற போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரின் கார் மீது கல்வீச்சு

தேனியில் உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்ற ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரின் கார் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-03-08 22:30 GMT

கடமலைக்குண்டு,

தேனி மாவட்டம் கடமலை–மயிலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முருக்கோடைராமர். இவர், தற்போது அ.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். வருசநாடு அருகே, முருக்கோடை கிராமத்தில் இவருடைய வீடு அமைந்துள்ளது. இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஆவார்.

இந்த நிலையில் தேனியில் நேற்று நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்காக, முருக்கோடை கிராமத்தில் இருந்து தனது காரில் அவர் புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்ற போது, அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், உண்ணாவிரதத்துக்கு செல்ல கூடாது என கூறினர்.

அப்போது காரில் இருந்து இறங்கிய முருக்கோடை ராமர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சமாதானம் அடையாத அவர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள், முருக்கோடை ராமர் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சிலர் அவரை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

கார் மீது கல்வீச்சு

அதனைத்தொடர்ந்து சாலையில் நின்றிருந்த சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில், முருக்கோடை ராமரின் காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருசநாடு போலீசார், முருக்கோடை கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சேதமடைந்த காரை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் முருக்கோடை ராமருக்கு ஆதரவாக அவருடைய வீட்டுக்கு வந்தனர். இதனால் முருக்கோடை கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே முருக்கோடை ராமர் வருசநாடு போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தூண்டுதலின்பேரில், தன் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் முருக்கோடை கிராமத்தை சேர்ந்த சின்னதங்கம் (வயது 50), பத்மநாதன்(33), செல்லப்பாண்டி(38) மற்றும் பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்