பெரவள்ளூரில் ஆடிட்டர் வீட்டில் 65 பவுன் நகை-பணம் கொள்ளை

பெரவள்ளூரில் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-03-08 22:45 GMT
பெரம்பூர்,

தனியார் நிறுவன ஆடிட்டர்

சென்னை பெரவள்ளூர் சிவஇளங்கோ சாலை, 70 அடி சாலையில் வசித்து வருபவர் மைதிலி (வயது 55). இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை 4 மணியளவில் வேலைக்கார பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. இதுகுறித்து மைதிலிக்கு தகவல் தெரிவித்தார்.

65 பவுன் நகை கொள்ளை

உடனே வீட்டுக்கு வந்த மைதிலி, பீரோவை பார்த்த போது அதில் வைத்து இருந்த 65 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மைதிலி, வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

இது குறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ரவுடிகள் கைது

* சென்னையில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சக்தி, பிரபு, நாகராஜ் உள்ளிட்ட 8 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
* வடபழனியில் லாட்ஜில் விபசாரம் நடத்தியதாக மேலாளர் சங்கர்கணேஷ் (41), அவரது கூட்டாளி அண்ணாதுரை (45) மற்றும் விபசார தரகர் சாந்தி (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
* மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குளத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
* ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் 7 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

பன்றி காய்ச்சலா?

* புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி தேவன் (40) நேற்று வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
* பழவந்தாங்கலில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது நண்பர் குமார் (45) என்பவரை தாக்கிய மீன் வியாபாரி ஜெயக்குமார் (43) கைது செய்யப்பட்டார்.
* மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கானத்தூர் கரிகாட்டுகுப்பத்தைச் சேர்ந்த நித்தீஸ்வரன் (6) என்ற சிறுவனுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்று பரிசோதனை நடந்து வருகிறது.
* அடையாறு மேம்பாலத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கீர்த்தி ஆனந்த் (24) என்பவரை தாக்கி மர்மநபர்கள் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர். கீர்த்தி ஆனந்த் தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர் ஆவார்.

மேலும் செய்திகள்