உயர்ந்த பதவியில் இருந்தாலும் குடும்பத்துக்கு பெண்கள் முதுகெலும்பாக இருக்க வேண்டும்

உயர்ந்த பதவியில் இருந்தாலும் குடும்பத்துக்கு பெண்கள் முதுகெலும்பாக இருக்க வேண்டும் என கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி தேன்மொழி கூறினார்.

Update: 2017-03-08 22:45 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் அரசு கலை கல்லூரியில் உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசன் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்துக்கழக வக்கீல் மோகன்ராஜ், கல்லூரியின் தேர்வு நெறியாளர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சுமதி வரவேற்றார். விழாவில் கும்பகோணம் தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி தேன்மொழி கலந்து கொண்டு மகளிர் நாள் சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

குடும்ப நல வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. குடும்பத்தில் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது தான் அதற்கு காரணம். முன்பெல்லாம் கணவன், மனைவி இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது 2 வயது, 3 வயது தான் வித்தியாசம் இருக்கிறது. முந்தைய தலைமுறையை சேர்ந்த பெண்கள் தங்கள் கணவரை பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். இந்த நிலை மாறிவிட்டது. பெண்கள், கணவரின் பெயரை சொல்லி அழைப்பது வாடிக்கையாகி விட்டது.

முதுகெலும்பு

தம்பதிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும். விவகாரத்து கேட்டு வரும் தம்பதிகள் சேர்ந்து வாழ வேண்டும் என நாங்கள் விரும்பினாலும், சாதாரணமாக ஒரு கையெழுத்தை போட்டு விட்டு கணவனும், மனைவியும் பிரிந்து செல்கின்றனர். இது வேதனைக்குரியது. உயர்ந்த பதவியில் இருந்தாலும் குடும்பத்துக்கு பெண்கள் முதுகெலும்பாக இருக்க வேண்டும். காதல் விவகாரங்களில் பெண்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் புதுக்கோட்டை கண்டனிவயல் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுமதிபிரியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ரூபி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்