நாமக்கல் குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து துரிதமாக நிறைவேற்றிட வேண்டும் அமைச்சர் தங்கமணி உத்தரவு

குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த பணிகளை துரிதமாக நிறைவேற்றிட வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2017-03-08 22:30 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கி, குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

கூட்டத்திற்கு சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா, மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:–

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு 60 சதவீதத்திற்கு மேல் குறைவாகவே பெய்து உள்ளது. இதையொட்டி பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான இந்த அரசு நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிடவும், தொடர்ந்து மக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கு வழி வகுத்திடும் வகையிலும், ஏறத்தாழ ரூ.15 கோடி நிதியை ஒதுக்கி தந்து, 600–க்கும் மேற்பட்ட குடிநீர் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.9 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் ஊரக பகுதியில் 462 குடிநீர் பணிகள் எடுக்கப்பட்டு, 25 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 437 பணிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை

பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்திட குடிநீர் திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து பணிகளையும் அலுவலர்கள் துரிதமாக நிறைவேற்றிட வேண்டும். நீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடவும், உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் நிறைவேற்றிட வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றி தருகின்ற அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததன் காரணமாக நீர் பற்றாக்குறை நிலவி வருகின்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை சரி செய்வதற்கு குடிநீர் தேவைகளை நிறைவேற்றிட அந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், கே.எஸ்.மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் (சேலம்) லட்சுமி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திரன், உதவி கலெக்டர்கள் ராஜசேகரன், கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்