மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து மாமல்லபுரத்தில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து மாமல்லபுரத்தில் மீனவர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-08 22:30 GMT

மாமல்லபுரம்,

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த திங்கட்கிழமை இரவு படகில் சென்று கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (வயது 21) என்ற மீனவர் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். இந்த துப்பாக்கி சூட்டினை கண்டித்து நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கருப்பு பட்டை அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகே வெண்புரு‌ஷம், கொக்கிலமேடு, மாமல்லபுரம், தேவனேரி, இளந்தோப்பு, சாலவான்குப்பம், பட்டிபுலம்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 200–க்கும் மேற்பட்டோர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். மத்திய, மாநில அரசு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதுஇடையூர் குப்பம் மீனவர்கள் இலங்கை கடற்படையின் செயலை கண்டித்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அங்கு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்