வங்கி அதிகாரிபோல் பேசி ஏ.டி.எம். அட்டை ரகசிய எண்ணை வாங்கி செவிலியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1¾ லட்சத்தை அபேஸ் செய்த மர்மஆசாமி திட்டக்குடி அருகே சம்பவம்

வங்கி அதிகாரி போல் பேசி ஏ.டி.எம். அட்டை ரகசிய எண்ணை வாங்கி செவிலியரின் வங்கி கணக்கில்

Update: 2017-03-19 22:45 GMT

திட்டக்குடி,

செவிலியர்

திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி அடுத்த போத்திரமங்கலத்தைச் சேர்ந்தவர் மீனா. இவர் அங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர் திட்டக்குடியில் உள்ள தேசியமாக்கப்பட்ட வங்கியில் ஒன்றில் கணக்கு வைத்துள்ளார்.

இந்த நிலையில், மீனாவின், செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். அப்போது, புதிதாக ஏ.டி.எம். எண் தர உள்ளோம் என்று கூறி, தங்களது வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். அட்டை எண், அதன் ரகசிய எண் ஆகியவற்றை கேட்டார்.

இதை உண்மை என்று நம்பிய மீனா, ஏ.டி.எம். அட்டை எண் மற்றும் அதன் ரகசிய எண்ணை போனில் பேசிய நபரிடம் தெரிவித்தார். பின்னர், சில மணிநேரங்களில் மீனாவின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் 75 ஆயிரத்தை அந்த நபர் எடுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது, அங்கிருந்து யாரும் பேசவில்லை என்றும், மர்ம ஆசாமி ஒருவர் வங்கி அதிகாரி போல் பேசி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

பின்னர், இது குறித்து மீனா ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி அதிகாரி போல் பேசி செவிலியரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்