கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை

ஈரோட்டில் கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2017-03-27 22:30 GMT

ஈரோடு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாமகிரிபேட்டையை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுடைய மகள் மோகனா (வயது 29). இவர் எம்.காம் படித்து உள்ளார். இவருக்கும் ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோட்டை சேர்ந்த பாலசுப்பிரமணி (35) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை கிடையாது.

இந்த நிலையில் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் பாலசுப்பிரமணியும், மோகனாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். இதனால் மோகனா கணவரை பிரிந்து ஈரோடு முனிசிபல் காலனி 2–வது வீதி ரங்கராவ்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

கள்ளக்காதல்

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் மோகனா வேலை செய்து வந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் வாங்க வந்த ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மகன் பாஸ்கர் (25) என்பவருக்கும், மோகனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். பாஸ்கருக்கு திருமணம் ஆகவில்லை. பி.காம் பட்டம் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகனா ஷோரூமில் வேலை பார்ப்பதை நிறுத்திவிட்டு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 10 நாட்களாக அந்த வேலைக்கும் செல்லாமல் மோகனா வீட்டில் இருந்து வந்தார்.

கொலை

இந்தநிலையில் மோகனாவை சந்திப்பதற்காக பாஸ்கர் நேற்று காலை 10 மணிஅளவில் முனிசிபல்காலனியில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், மோகனாவின் கழுத்தை நெரித்தார். இதனால் மூச்சு திணறி மோகனா பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து பாஸ்கர் மோகனாவின் உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலமாக தொடர்புகொண்டு, மோகனாவை கொலை செய்துவிட்டதாகவும், தானும் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறினார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் மோகனாவின் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மோகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இதற்கிடையே மோகனாவை கொலை செய்த பாஸ்கர் கருங்கல்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பாஸ்கரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோகனாவின் உடலை பார்த்து அவருடைய தாய் மஞ்சுளாவும், உறவினர்களும் கதறி துடித்தனர். இதேபோல் பாஸ்கரின் உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

திருமணத்திற்கு வற்புறுத்தல்

மோகனா கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாரும், பாஸ்கர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாஸ்கரும், மோகனாவும் நெருக்கமாக பழகி வந்ததால் அவர்களுக்குள் யாராவது ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கலாம், இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாஸ்கருக்கும், மோகனாவுக்கும் இடையே வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா? கொலை வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் கள்ளக்காதலியை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்