இடுக்கொரை கிராமத்தில் சுற்றித்திரியும் கரடியை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்

இடுக்கொரை கிராமத்தில் சுற்றித்திரியும் கரடியை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2017-03-30 22:30 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை காலனி மற்றும் இடுக்கொரை ஹட்டி கிராம பகுதியில் 250–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மாணவ– மாணவிகள் அருகே உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து மாலையில் கேர்பட்டா கிராமத்தில் இருந்து இடுக்கொரை செல்லும் நடைபாதையில் மாணவ– மாணவிகள் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்த கரடி ஒன்று அவர்களை துரத்தியது. கரடியிடம் சிக்காமல் அங்கு இருந்து தப்பி ஓடினார்கள். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை

இதை தொடர்ந்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் உத்தரவின் பேரில் வனவர் தமிழ்மோகன், வனக்காப்பாளர் முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கரடி நடமாட்டம் இருந்த பகுதியை பார்வையிட்டனர். மேலும் பட்டாசு வெடித்து தேயிலை தோட்டத்தில் இருந்து கரடியை விரட்டினார்கள்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, இடுக்கொரை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கரடி சுற்றித்திரிவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கரடியின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது பட்டாசு வெடித்து கரடியை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றனர்.

தேயிலை தோட்டத்திற்குள் கரடி சுற்றி வருவதால் பசுந்தேயிலை பறிக்கும் தொழிலாளர்களும், அந்த வழியாக செல்பவர்களும் அச்சமடைந்து உள்ளனர்.


மேலும் செய்திகள்