சென்னிமலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி சென்னிமலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-30 22:45 GMT
சென்னிமலை,

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் எல்லைக்கிராமம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி அம்பேத்கார் நகர். இங்கு 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு எல்லைக்குமாரபாளையத்தில் உள்ள கிணற்றில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த 2 மாதங்களாக எல்லைக்குமாரபாளையத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் குறைந்து விட்டதால் அம்பேத்கார் நகர் மக்களுக்கு குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ளவர்கள் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்


இந்த நிலையில், அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீர் சீராக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்பேத்கார் நகர் பொதுமக்கள் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று பகல் 11 மணி அளவில் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் சென்னிமலை வட்டார வளர்ச்சி அதிகாரி ஹேமலதாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘அம்பேத்கார் நகர் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் போதிய அளவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் டேங்கர் லாரி மூலம் எங்கள் பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அதிகாரி ஹேமலதா கூறுகையில், ‘இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்