‘ஆள் கடத்தல் சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்’ போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் பேச்சு

ஆள் கடத்தல் சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்று போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் கூறினார்.

Update: 2017-03-30 23:00 GMT
திண்டுக்கல்,

கருத்தரங்கம்

திண்டுக்கல்லில் ஆள் கடத்தலை தடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்குதல் தொடர்பாக கருத்தரங்கம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் மணி கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளிகளில் ஆள் கடத்தல் தொடர்பான வகுப்புகளை நடத்த இருக்கிறோம். ஆள் கடத்தல் மற்றும் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குதல் போன்றவற்றை தடுக்க தனித்தனியாக சட்ட பிரிவுகள் உள்ளன. அந்த சட்டத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் முடியும்.

இந்த சட்டங்களை பொதுமக்கள் தெரிந்து இருக்க வேண்டும். குறிப்பாக அனைத்து சட்டங்கள் பற்றிய அடிப்படை புரிதல் நிச்சயம் இருக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் பங்கெடுக்க முடியும்.
அறிவை வளர்க்க வேண்டும்

பொதுவாக, கடத்தல் சம்பவங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதற்கு அடுத்தபடியாக குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு கல்வி, சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அவர்கள் மனம், உடல், ஆன்மா ரீதியாக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

இதற்கு பெண்கள் முழுமையாக அறிவை வளர்க்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பார்கள். தெளிவான அறிவு, திறன் மூலம் கடத்தல்களை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்