வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2017-03-30 22:45 GMT
வேளாங்கண்ணி,

உலக மக்களின் பாவங்களை போக்குவதற்காக பெரிய வெள்ளிக்கிழமையன்று ஏசு கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார். பின்னர் அவர் அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாள் உயிர்த் தெழுந்தார். ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த நாளை புனித வெள்ளி என்றும், அதை துக்க நாளாக கடைப்பிடித்தும், அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாள் ஏசு உயிரோடு எழுந்ததை ஈஸ்டர் திருநாளாகவும், உயிர்ப்பு பெருநாள் விழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஈஸ்டர் திருநாளிற்கு முந்தைய நாட்களை தவக்காலமாக கருதுகின்றனர். கிறிஸ்தவர்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து, மனதில் நல்ல எண்ணங்களை மட்டும் சிந்தித்து தவக்காலத்தை அனுசரித்து வருகிறார்கள். இந்த தவக்காலத்தை இறைவனின் அன்பை, மன்னிப்பை, இரக்கத்தை உணரும் காலமாக கிறிஸ்தவர்கள் கருது கிறார்கள். இச்சிறப்பு பெற்ற தவக்காலம் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தவக்காலத்தையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், நேற்று முன்தினம் ஏசு மக்களுக்காக பாடுபட்டதை நினைவு கூறும் வகையில் சிறப்பு சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாங்கண்ணி ஆர்ச்சில் இருந்து தொடங்கிய இந்த சிலுவை பாதை நிகழ்ச்சியில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு சிலுவையை கையில் ஏந்தியவாறு ஏசு மக்களுக்காக பாடுப்பட்டதை நினைவு கூர்ந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் இந்த சிலுவை பாதை ஊர்வலம் பேராலயத்தில் நிறைவடைந்தது. 

மேலும் செய்திகள்