குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் பரபரப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-03-30 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன், கூட்டுறவு இணை பதிவாளர் காந்திதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாண்டியராஜன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பேசியபோது, தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளும் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்பி கூட்ட அரங்கிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

நெல் சாகுபடி வேண்டாம்

நிர்மல்ராஜ் (கலெக்டர்):- திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. நீர் நிலைகள் வற்றி கிடக்கின்றன. இதனால் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. மின் வினியோகம் வரும் காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே கோடை கால நெல் சாகுபடி பாதிக்கப்பட்டால் நிவாரணம் வழங்க இயலாது.

மருதப்பன்:- தேசிய நெடுஞ்சாலைகள், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலகுமாரன்:- பேரளம் வீரானந்தம் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. 

மேலும் செய்திகள்