சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாதம் 3-வது முறையாக உண்டியல் திறப்பு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாதம் 3-வது முறையாக உண்டியல் திறப்பு ரூ.44¾ லட்சம் காணிக்கை கிடைத்தது

Update: 2017-03-30 22:30 GMT
சமயபுரம்,

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். தமிழ்நாட்டில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பக்தர்கள் வருவது இங்கு மட்டும்்தான். பவுர்ணமி, அமாவாசை, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருவார்கள். அப்படி வரும் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் இரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருகை, பூச்சொரிதல் விழா ஆகிய காரணங்களால் 3-வது முறையாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் தென்னரசு, இந்து சமய அறநிலையதுறை திருச்சி தாயுமானவர் சுவாமி கோவில் உதவி ஆணையர் சுரேஷ், கரூர் உதவி ஆணையர் சூரிய நாராயணன், கோவில் மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.44 லட்சத்து 88 ஆயிரத்து 372 மற்றும் 930 கிராம் தங்கம், 5 கிலோ 160 கிராம் வெள்ளியும், மேலும் வெளிநாட்டு பணம் 132-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருச்சி அய்யப்பா சேவா சங்கம், அம்மன் அருள் ஆகியவற்றை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்