தொலைக் காட்சி பெட்டிக்களை எடுக்கவந்த அதிகாரிகளை பொது மக்கள் முற்றுகை

தி.மு.க. ஆட்சியின் போது வழங்கப்பட்ட தொலைக் காட்சி பெட்டிக்களை எடுக்கவந்த அதிகாரிகளை பொது மக்கள் முற்றுகை

Update: 2017-03-30 23:00 GMT
மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட முட்டுக்காடு, தாழங்காடு ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்களுக்கு முந்தைய தி.மு.க ஆட்சியின் போது 400க்கும் மேற்பட்ட வண்ண தொலைக் காட்சி பெட்டிக்கள் வழங்கப்பட்டது. இவற்றை பொது மக்களுக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக வழங்குவதற்குள் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.

இதனால் தேர்தல் நடை முறை விதிகளின் படி இதை பொது மக்களுக்கு வழங்காமல் அரசு அதிகாரிகள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த வண்ண தொலைக் காட்சி பெட்டிக்கள் வைக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தங்களது இடத்தில் இருந்து அவற்றை எடுத்துசெல்லுங்கள் என்று இடத்தின் உரிமையாளர் தரப்பில் கூறியுள்ளனர். இதனால் அங்குள்ள வண்ண தொலைக் காட்சி பெட்டிகளை எடுக்க மரக்காணம் தாசில்தார் மனோகரன் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் டி.வி. பெட்டிக்கள் வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் அரசு சார்பில் வழங்கிய இந்த டி.வி.க்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் எங்களுக்கு வழங்கவேண்டும். இதை எங்களுக்கு வழங்காமல் இங்கிருந்து எடுத்துசெல்ல கூடாது என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அதிகாரிகள் இவற்றை நாங்கள் எடுத்து செல்ல வரவில்லை. இவைகள் வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் வைத்துள்ள அனைத்தும் பாதுகாப்பாகவும், குறையாமலும் இருக்கிறதா என்று சோதனை செய்யவே வந்தோம் என்று கூறினர். மேலும் அந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று டி.விக்களை சோதனை செய்துவிட்டு மீண்டும் அந்த அறைக்கு புதிய பூட்டை போட்டு விட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர். இதனை தொடர்ந்து பொது மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்