கவர்னர், ஆட்சியாளர்கள் மோதலால் மாநில வளர்ச்சிக்கு பாதிப்பு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு: கவர்னர், ஆட்சியாளர்கள் மோதலால் மாநில வளர்ச்சிக்கு பாதிப்பு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

Update: 2017-03-30 23:30 GMT
புதுச்சேரி,

சட்டசபையில் நேற்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கவர்னர், ஆட்சியாளர்கள் மோதலால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

வெளிநடப்பு


புதுவை சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிக்கொண்டு இருந்த போது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி எழுந்து கடந்த கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தற்போது சரிவர நிறைவேற்றப்படவில்லை, நீட் தேர்வு, அரசு மருத்துவக்கல்லூரியில் 3 நோயாளிகள் இறப்பு, வறட்சி பாதிப்பு ஆகியவை குறித்து பேச எம்.எல்.ஏ.க்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறி வெளியேறினார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜெ. ஜெயபால், அசோக் ஆனந்த், திருமுருகன், சுகுமாறன், கோபிகா, சந்திரபிரியங்கா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

மாநில வளர்ச்சி பாதிப்பு


பின்னர் நிருபர்களுக்கு ரங்கசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த ஆட்சி பொறுப்பேற்றபின் 4,5 ஆண்டுகள் பணியாற்றிய நிரந்தர தொழிலாளர்கள் கூட பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு நிறுவனங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம், பஞ்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதில் எதையும் இந்த அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. 4, 5 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை நீக்கியது தான் இந்த அரசின் சாதனையாக உள்ளது.

கவர்னருடன் ஆட்சியாளர்கள் மோதல் போக்கை கையாளுவதால் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் யார் ஆணையை செயல்படுத்துவது என தெரியாமல் தவிக்கின்றனர். அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக அமைச்சர்களே பேசுகின்றனர். எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய மரியாதை இல்லை. சட்டசபையில் உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தருவதில்லை. அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

மேலும் செய்திகள்