பாவூர்சத்திரம் அருகே பீடி நிறுவனத்தை முற்றுகையிட்ட பெண்கள்

பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி மற்றும் குருசாமிபுரத்தில் ஒரு தனியார் பீடி நிறுவனம் இயங்கி வருகிறது.

Update: 2017-04-06 20:30 GMT
ஆலங்குளம்,

பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி மற்றும் குருசாமிபுரத்தில் ஒரு தனியார் பீடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பீடிச்சுற்றி வருகிறார்கள்.

பீடி சுற்றுவதற்கான சம்பளம் வாரந்தோறும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம் 500, 1000 ரூபாய் நோய்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து பீடித்தொழிலாளர்களுக்கு சம்பள பணத்தை நேரடியாக அவர்களிடம் கொடுக்காமல், வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் பீடித்தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பளத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், நேரில் தர வேண்டும் என்று நிறுவனத்திடம் கூறிவந்தனர்.

இந்த நிலையில் 100–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கல்லூரணி, குருசாமிபுரம் பீடி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தங்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நிறுவன அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்