பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு: சாலைப்பணியாளர்கள் நூதன போராட்டம்

சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சாலைப்பணியாளர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2017-04-06 22:45 GMT
கோவை,

மாநில நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கோவை திருச்சி ரோட்டில் உள்ள கோட்டப்பொறியாளர் அலு வலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் ஆர்.வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஆர்.அருள்தாஸ், ஆர்.ராஜேந்திரன், ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, சாலைப் பணியாளர்கள் பாடைகட்டியும், சங்கு ஊதியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். மணி அடித்தபடி கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினார்கள்.

கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச்செயலாளர் மா.பாலசுப்பிரமணியன் கூறியதாவது-

அரசுப்பணம் விரையம்

ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு கொடுத்துள்ளனர். இதற்காக ரூ.1,300 கோடி ஒதுக்கியுள்ளனர். ரூ.300 கோடி மதிப்புள்ள பணிக்கு கூடுதல் தொகையை ஒதுக்கி உள்ளதுடன், நெடுஞ்சாலைப்பணியாளர்களின் நலனையும் புறக்கணித்துள்ளனர். இதனால் அரசுப்பணம் விரையமாகியுள்ளது. சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிகாலமாக அறிவித்து பணப்பலன் வழங்க வேண்டும். மாதந்தோறும் 20-ந் தேதி தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் சிரமப்படுகிறார்கள். சாலைப்பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

22-ந் தேதி போராட்டம்

சாலைப் பணியாளர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை எண் 87-ஐ ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கை இதுவரை ஏற்கப்படாமல் உள்ளதால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இந்த நூதன போராட்டம் நடத்துகிறோம். வருகிற 22-ந் தேதி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலைப்பணியாளர்களின் போராட்டம் ஒரு மணிநேரம் நடைபெற்றது.
 

மேலும் செய்திகள்