எந்த சூழ்நிலையிலும் சுய கட்டுப்பாடு அவசியம் மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் சங்கர் அறிவுரை

மாணவ–மாணவிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் சுய கட்டுப்பாடு அவசியம் என்று கலெக்டர் சங்கர் அறிவுரை வழங்கினார்.

Update: 2017-04-06 23:00 GMT

ஊட்டி,

ஊட்டி பிரிக்ஸ் பள்ளி அரங்கில் 12–ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவ–மாணவிகளுக்கான மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது:–

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட கல்விக்கு தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது. தற்போது தமிழக அரசு பட்ஜெட்டில் கல்விதுறைக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் மேற்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் இந்திய அளவில் கல்வி வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் 3–வது இடத்தில் உள்ளது. மாணவ–மாணவிகளின் எதிர்காலம் கருதி தமிழக அரசு தற்போது 12–ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவிகள் மேற்கொண்டு என்ன படிப்பு படிக்கலாம் என்பதற்கு இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

சுய கட்டுப்பாடு

மாணவ–மாணவிகளுக்குள எந்த சூழ்நிலையிலும் சுய கட்டுப்பாடு அவசியம். ஆகவே சுய கட்டுப்பாட்டை இழக்க கூடாது. இதனால்தான் வள்ளுவர் உயிரை விட ஒழுக்கம் மேன்மையானது என்று கூறினார். மாணவ–மாணவிகள் தங்களது விஞ்ஞான அறிவினை ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்.

ஆபிரகாம் லிங்கன் பல்வேறு தோல்விகளை சந்தித்த பின்னரே அமெரிக்க அதிபர் ஆனார். எனவே உங்களுக்கு விடா முயற்சி மிகவும் அவசியம். பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின்ள எண்களை பயன்படுத்துவது குறித்து கண்டுபிடிக்காவிட்டால், பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் கண்டு பிடித்து இருக்க முடியாது என்று கூறினார்.

தன்னம்பிக்கை

உலகத்திற்கு பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்து வைத்த நாடு நம்நாடுதான் எனவே கடினமாக உழைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் அதற்கான தன்னம்பிக்கையை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து மேற்படிப்புக்கான வழிகாட்டி புத்தகங்களை மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் சங்கர் வழங்கினார்.

கருத்தரங்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணே‌ஷ மூர்த்தி, ஊட்டி ஆர்.டி.ஓ. கார்த்திக்கேயன், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்