கரூர் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு அமீனா வந்ததால் பரபரப்பு

நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கரூர் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு அமீனா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-04-06 22:45 GMT
கரூர்,

கரூர்- சேலம் அகல ரெயில் பாதை அமைக்க நிலங்களை ரெயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. அதன்படி நிலம் கொடுத்த பலருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கரூரை அடுத்த ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த அம்மையப்பன் உள்பட 6 பேருக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும், எனவே உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் கரூர் சார்பு நீதிமன்றத்தில் அம்மையப்பன் உள்பட 6 பேர் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நிலம் வழங்கியவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நிலையில் 3 ஆண்டுகள் ஆகியும் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை என்று கூறி, அவர்கள் மீண்டும் கோர்ட்டை அணுகினர். இதைத்தொடர்ந்து நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து நேற்று ரெயில்வே நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், வக்கீல்கள், கோர்ட்டு அமீனா ஆகியோர் கரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அமீனா கோர்ட்டு வழங்கிய உத்தரவு நகலை கரூர் ரெயில் நிலைய மேலாளர் சுரேந்தர்பாபு, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோரிடம் வழங்கினார். அதை படித்து பார்த்த அவர்கள் உரிய இழப்பீடு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து சென்றனர். இதனால் நேற்று காலை கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்