நெடுஞ்சாலைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி சாலைப்பணியாளர்கள் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-04-06 23:00 GMT
ஈரோடு,


சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். இறந்துபோன சாலைப்பணியாளர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். அரசு ஆணை 87–ஐ ரத்து செய்து உடனடியாக சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். தகுதி உள்ள சாலைப்பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் இரவு காவலர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

8–வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்தி 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் ஈரோடு கோட்ட மையம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்


ஈரோடு மூலப்பாளையம் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் கே.ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கிராம பொது சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் வி.உஷாராணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, ஈரோடு வட்ட கிளை செயலாளர் பி.சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் சாலைப்பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதியும், மணி அடித்தும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க கோட்ட செயலாளர் ரங்கசாமி, துணைத்தலைவர் அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்