‘அன்னபாக்ய’ திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டம்

‘அன்னபாக்ய‘ திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை சிவமொக்காவில் மந்திரி காகோடு திம்மப்பா தொடங்கி வைத்தார்.

Update: 2017-04-06 21:36 GMT

சிவமொக்கா,

‘அன்னபாக்ய‘ திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை சிவமொக்காவில் மந்திரி காகோடு திம்மப்பா தொடங்கி வைத்தார்.

கூடுதலாக 2 கிலோ அரிசி

கர்நாடகத்தில் ‘அன்னபாக்ய‘ திட்டத்தின் கீழ் ரே‌ஷன் கடைகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கான குடும்ப அட்டைகளுக்கு ஒருவருக்கு இலவச அரிசி 5 கிலோ வழங்கப்பட்டு வந்தது. இந்த இலவச அரிசியை கூடுதலாக 2 கிலோ உயர்த்தி அதாவது, ஒருவருக்கு 7 கிலோவாக உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் (மார்ச்) 31–ந்தேதி பெங்களூரு விதானசவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்–மந்திரி சித்தராமையா கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

அதன்பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் இந்த திட்டத்தை தொடங்கிவைத்து வருகின்றனர். அதேபோல, நேற்று சிவமொக்கா மாவட்டத்திலும் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மாவட்ட பொறுப்பு மந்திரியும், வருவாய் துறை மந்திரியுமான காகோடு திம்மப்பா தொடங்கி வைத்தார்.

வறுமை கோட்டுக்கு கீழ்...

சிவமொக்கா அம்பேத்கர் பவனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மந்திரி காகோடு திம்மப்பா கலந்துகொண்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 7 கிலோ அரிசியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘பசியால் யாரும் இறக்கக்கூடாது என்பதற்காக ‘அன்னபாக்ய‘ திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது கூடுதலாக 2 கிலோ உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்‘ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லோகேஷ், உணவு பொருட்கள் வழங்கல் துறை கூடுதலர் இயக்குனர் லட்சுமணரெட்டி, மாநகராட்சி மேயர் ஏழுமலை, மாவட்ட பஞ்சாயத்து தலைவி ஜோதி எஸ்.குமார், துணைத்தலைவி வேதா விஜயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்