தூத்துக்குடி கடல் பகுதியிலுள்ள வான் தீவை சுற்றுலா தலமாக்க வேண்டும் கலெக்டரிடம், மீனவர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி கடல் பகுதியிலுள்ள வான் தீவை சுற்றுலா தலமாக்க வேண்டும், என கலெக்டரிடம் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2017-04-07 20:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி கடல் பகுதியிலுள்ள வான் தீவை சுற்றுலா தலமாக்க வேண்டும், என கலெக்டரிடம் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் தீபக்ஜேக்கப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, மீன்வளத்துறை இணை இயக்குனர் ரீனாசெல்வி, உதவி இயக்குனர் பாலசரசுவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆஸ்பத்திரி...

கூட்டத்தில், மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினர். அப்போது, ‘தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் மீனவர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் வசதிக்காக, தனியார் ஆஸ்பத்திரி மூலம் ஒரு மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. அந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க கோரிக்கை வைத்தோம். இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக தனியார் ஆஸ்பத்திரியும் செயல்படவில்லை. ஆகையால் எங்களுக்கு விரைவாக அரசு ஆஸ்பத்திரி அமைத்து கொடுக்க வேண்டும்.

மீனவ கிராமங்களில் ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், மீனவ மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வெள்ளப்பட்டியில் சோலார் மின்விளக்குகள் அமைக்க வேண்டும், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.

வான் தீவு

தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும். மீனவர் அடையாள அட்டை பெறுவதற்கு போலீசில் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மீனவராக பதிவு செய்ய முடியவில்லை. வழக்கு இருந்தால் அவர் மீன்பிடி தொழில் செய்யக்கூடாதா?. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் பிடிபட்ட படகுகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

சுருக்குமடிக்கு தடை

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கருவி வழங்கப்படுவதாகவும், அதற்கு ரூ.500 பணம் செலுத்த வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த கருவியை பார்த்தால்தான் வாங்க முடியும். அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நாட்டுப்படகு மீனவர்கள் 95 சதவீதம் பேர் உள்ளனர். தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் போது, நாட்டுப்படகு மீனவர்களிடம் எந்த கருத்தும் கேட்பது இல்லை. விதியை மீறி பெரிய அளவிலான விசைப்படகுகள் இயக்கப்படுவதை அனுமதிக்க கூடாது. சுருக்குமடியை தடை செய்ய வேண்டும், என்று கூறினர்.

மீன்பிடி தடைக்காலம்

கூட்டத்தில், மீனவர்களுக்கு பதில் அளித்து கலெக்டர் ரவிகுமார் பேசும் போது, ‘ மாவட்டத்தில் வருகிற 15–ந் தேதி முதல் மே மாதம் 29–ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. மீன்பிடிப்பு குறைந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கப்படும் மீன்பிடிப்பு குறைந்த கால உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மீன்வளக்கல்லூரி மூலம் மாதிரி மீனவர் கிராமமாக கொம்புதுறை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு ரூ.2 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளன. தூத்துக்குடி இனிகோ நகரில் 700 மீட்டர் தூரத்துக்கு 11 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரத்தில் 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மீன்வள தகவல் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே ஏற்படும் பிரச்சினைகளை பேசி தீர்க்க கமிட்டி அமைக்கப்படும். விசைப்படகுகள் 20 மீட்டருக்கு மேல் இருப்பதை அதிகாரிகள் அனுமதிக்க கூடாது என்று கூறினார்.

மேலும் செய்திகள்