சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க கோரி போராட்டம்

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள் பேரவை சார்பில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க கோரி போராட்டம்.

Update: 2017-04-26 21:00 GMT
சென்னை,

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள் பேரவை சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ரவீந்திரன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று மதிய உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் குறித்து பேராசிரியர் ரவீந்திரன் கூறியதாவது:–

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 17–ந் தேதி துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால் அவர் பதவிக்காலம் முடிவடைவதற்கு 10 நாட்களுக்கு முன்பே துணைவேந்தரை தேர்வு செய்ய 3 பேர் பெயர்களை சிபாரிசு செய்யும் கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி அமைக்கப்பட்டு 15 மாதங்கள் ஆகியும் இன்னும் துணைவேந்தரை நியமிக்கவில்லை. சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனே துணைவேந்தரை கவர்னர் நியமிக்கவேண்டும். துணைவேந்தர் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி இருக்கவேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை பணி வரன்முறை செய்து, பணி நிரந்தரம் செய்யவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத்தை கொண்டுவரவேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர்கள் யாரையும், அடுத்த பல்கலைக்கழகத்தில் சேர்ப்பது இயலாத காரியம். காரணம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனியாக விதிகள் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்