மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் நினைவிடத்தை சுற்றுலாத்தலமாக மாற்றக்கோரி வழக்கு

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் நினைவிடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2017-04-26 23:00 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் ஆர்.சீனிவாசராவ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

சுற்றுலாத்தலம்

‘சென்னை மயிலாப்பூர் முண்டககன்னியம்மன் சாலையில், திருவள்ளுவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடம் 1935–ம் ஆண்டு மே 6–ந் தேதி புதுப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், நினைவிடத்தை அரசு பராமரிக்காமலும், புதுப்பிக்காமலும் உள்ளது.

இதையடுத்து கடந்த மார்ச் 9–ந் தேதி தமிழக உள்துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை செயலாளர், சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்தேன். அதில், நினைவிடத்தை புதுப்பித்து, உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தேன். ஆனால் இதுவரை அந்த மனுவை பரிசீலிக்காமல் உள்ளனர்.

எனவே, திருவள்ளுவர் நினைவிடத்தை முறையாக பராமரித்து, சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தமிழக அரசுக்கு உத்தரவு

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘வழக்கை வருகிற ஜூன் 13–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்கிறோம். தமிழக உள்துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர்கள், சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்