அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

ஓ.பன்னீர்செல்வம் அணி கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன. மீண்டும் ஜெயலலிதா படத்துடன் பேனர் வைக்கப்பட்டன.

Update: 2017-04-26 23:30 GMT
சென்னை,

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தின் இருபுறங்களிலும் அவரை வரவேற்கும் விதமாக அவருடைய உருவப்படத்துடன் தலா 4 பேனர்கள் வீதம் 8 பேனர்கள் வைக்கப்பட்டன.

அ.தி.மு.க. மாணவர் அணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, ஜெயலலிதா பேரவை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம், அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, வக்கீல் பிரிவு, இளைஞர் பாசறை–இளம்பெண்கள் பாசறை ஆகிய 8 அணிகள் சார்பில் பேனர்கள் இடம் பெற்றிருந்தன. ஜெயலலிதா படத்துடன் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரது படமும் பேனரில் இடம் பெற்றிருந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டவுடன்,
அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் ஜெயலலிதா, அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரது உருவப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் சசிகலா படமும் பெரிய அளவில் இடம் பெற்றது.

சசிகலா பேனர்கள் அகற்றம்

இதற்கிடையே சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு அ.தி.மு.க. அம்மா அணி என்றும், அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என்றும் 2 அணிகள் உருவாகியது.

இதையொட்டி அ.தி.மு.க. வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இந்த சின்னத்தை மீட்டெடுப்பதற்காக பிளவுபட்ட அ.தி.மு.க.வை ஒன்று இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், ‘ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று 2 முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சசிகலாவின் படங்களை அகற்றி கட்சியின் புனிதத்தை காக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலக வளாகத்தில் சசிகலா படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் நேற்று காலை அகற்றப்பட்டன. அதே இடத்தில் மீண்டும் ஜெயலலிதா, அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருடைய படங்களுடன் பேனர்கள் உடனடியாக வைக்கப்பட்டன. கட்சி அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சசிகலா படங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

சாதகம்

அ.தி.மு.க. (அம்மா) அவைத்தலைவர் செங்கோட்டையன், அமைப்பு செயலாளர் வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் உத்தரவின்பேரில், சசிகலா படம் பொறித்த பேனர்களை அகற்ற வந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கையை ஏற்று சசிகலா பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதால், இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்