நகைக்கடையில் மோசடியில் ஈடுபட்ட தம்பதி அடையாளம் தெரிந்தது கைது செய்ய போலீசார் தீவிரம்

குலசேகரத்தில் நகைக் கடையில் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் அடையாளம் தெரிந்து கொண்டனர். அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Update: 2017-04-26 23:00 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டம் குலசேகரம் சந்தை பகுதியில் சுரேஷ் (வயது 42) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு இளம் வயதுடைய ஒரு ஜோடி நகை வாங்க வந்தனர். அவர்கள் கடையில் இருந்த ஊழியரிடம் தங்க நகையென ஒரு நெக்லசை கொடுத்து அதற்கு ஈடாக 6 பவுன் தங்க வளையல்கள் பெற்றுக்கொண்டனர்.

அவர்கள் சென்ற பின்பு கடை ஊழியர்கள் அந்த நெக்லசை பரிசோதித்து பார்த்த போது அது கவரிங் நகை என தெரியவந்தது. இந்த மோசடி குறித்து குலசேகரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

கணவன்–மனைவி

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கடையில் நகை வாங்கிய ஆண் மற்றும் பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சியை கைப்பற்றிய போலீசார் அதில் இருப்பவர்கள் யார்? என விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் மார்த்தாண்டம், ஆயிரம் தெங்கு பகுதியை சேர்ந்த கணவன்–மனைவி என அடையாளம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஆயிரம்தெங்கு பகுதிக்கு சென்றனர். ஆனால், அதற்குள் கணவன்–மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.  

 இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் மோசடி தம்பதியை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


மேலும் செய்திகள்