பா.ஜனதா கட்சி நலனில் அக்கறை இருந்தால் புதிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும் ஈசுவரப்பா அறிக்கை

பா.ஜனதா கட்சி நலனில் அக்கறை இருந்தால் புதிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று ஈசுவரப்பா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2017-04-29 20:30 GMT

சிவமொக்கா,

பா.ஜனதா கட்சி நலனில் அக்கறை இருந்தால் புதிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று ஈசுவரப்பா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடியூரப்பா

முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா கடந்த 2013–ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, பா.ஜனதாவில் இருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்ற கட்சியை தொடங்கினார். இதனால் அந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அதைதொடர்ந்து பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க எடியூரப்பா, தனது ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

அதைதொடர்ந்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து எடியூரப்பா மாநில, மாவட்டம், தாலுகா அளவில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். ஆனால் எடியூரப்பா தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளை வழங்கியதாக பா.ஜனதா மூத்த தலைவரும், கர்நாடக மேல்–சபை தலைவருமான ஈசுவரப்பா உள்ளிட்ட சில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் எடியூரப்பா சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார் எனவும் குற்றம்சாட்டினர்.

அமித்ஷா சமாதானப்படுத்தினார்

இதன் தொடர்ச்சியாக ஈசுவரப்பாவுக்கும், எடியூரப்பாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே எடியூரப்பா, தனது சொந்த மாவட்டமான சிவமொக்கா மாவட்ட பா.ஜனதா தலைவராக ருத்ரேகவுடாவை நியமித்தார். அதே மாவட்டத்தை சேர்ந்த ஈசுவரப்பாவை எடியூரப்பா கட்சியில் இருந்து ஓரம் கட்ட தொடங்கினார். வருகிற 2018–ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் சிவமொக்கா நகர தொகுதியில் ருத்ரேகவுடாவை வேட்பாளராக நிறுத்தவும் எடியூரப்பா காய்களை நகர்த்தி வருகிறார்.

ருத்ரேகவுடா, எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சி சார்பில் 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிவமொக்கா நகர தொகுதியில் போட்டியிட்டு 200 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரசன்னகுமாரிடம் தோல்வி அடைந்தார். அதே தேர்தலில் பா.ஜனதா சார்பில் களமிறங்கிய ஈசுவரப்பா 3–வது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அறிந்துகொண்ட ஈசுவரப்பா, தன்னை எடியூரப்பா புறக்கணிப்பதை தடுப்பதற்காக சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் என்ற அமைப்பை தொடங்கினார். அதில் எடியூரப்பாவுக்கு எதிரான அதிருப்தியாளர்களையும் சேர்த்துக்கொண்டு, எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். உடனே ஈசுவரப்பா, எடியூரப்பாவை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். இதையடுத்து இருவரும் மோதல் போக்கை கைவிட்டு கட்சி பணியில் தீவிரமாக செயல்படுவோம் என்றனர்.

உச்சகட்ட மோதல்

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு கட்சி நிர்வாகிகளை எடியூரப்பா ஒருங்கிணைத்து செயல்படாததே காரணம் எனவும், அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் ஈசுவரப்பா, எடியூரப்பாவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதற்கிடையே பெங்களூருவில் கடந்த 27–ந்தேதி நடந்த அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள், எடியூரப்பா தன்னிச்சையாக செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர். அத்துடன் அடுத்த மாதம் (மே) 10–ந்தேதிக்குள் எடியூரப்பா நியமித்த புதிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் 12–ந்தேதி சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு சார்பில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையே கட்சி கட்டுப்பாட்டை மீறி ஈசுவரப்பா உள்ளிட்ட பா.ஜனதாவை சேர்ந்த சில தலைவர்கள் அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதால், அவர்கள் மீது தேசிய தலைவர் அமித்ஷா ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார் என்று எடியூரப்பா தெரிவித்தார். மேலும் எடியூரப்பாவை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக ஈசுவரப்பாவை கண்டித்து எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். கர்நாடக பா.ஜனதாவில் எடியூரப்பா, ஈசுவரப்பா இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈசுவரப்பா அறிக்கை

இந்த நிலையில் ஈசுவரப்பா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதாவில் தற்போது நடந்து வரும் நிலையை பற்றி தான் பேசினோம். தேசிய தலைவர் அமித்ஷா கூறியும் இதுவரை எடியூரப்பா நிர்வாகிகளை மாற்றி அமைக்கவில்லை. இதன் மூலம் அவர் சர்வாதிகார போக்குடன் செயல்படுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் எடியூரப்பா, தன்னுடன் கர்நாடக ஜனதா கட்சியில் இருந்தவர்களின் பேச்சை கேட்டு நடந்து வருகிறார்.

என்னை கட்சியின் தேசிய துணை தலைவர் பி.எல்.சந்தோஷ் பின்னால் இருந்து இயக்குவதாக எடியூரப்பா கூறியுள்ளார். அதில் எந்த உண்மையும் இல்லை. இதற்காக எடியூரப்பா பி.எல்.சந்தோசிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். எடியூரப்பாவின் செயல்பாடு சங்பரிவார் நிர்வாகிகள் இடையே மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கர்நாடகத்தில் நிலவும் உட்கட்சி மோதலை மேலிட தலைவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எடியூரப்பாவின் தன்னிச்சையான செயல்பாட்டால் தற்போது கர்நாடகத்தில் பா.ஜனதாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய காலம் கடந்து போகவில்லை. விரைவில் எடியூரப்பா நியமித்த புதிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும். பா.ஜனதா கட்சி நலனில் அக்கறை இருந்தால் புதிய நிர்வாகிகளை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்