பெங்களூருவில் ஆலங்கட்டி மழை போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

பெங்களூருவில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

Update: 2017-04-29 21:00 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. மழை காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

காலையில் வெயில்

பெங்களூருவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலேயே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதம் பிறந்ததில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வெயில் வாட்டி வதைப்பதால் பெங்களூரு வாசிகள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்து பெங்களூரு வாசிகளை குளிர்வித்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவும் பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. நேற்று காலையில் வழக்கம் போல வெயில் அடித்தது. பின்னர் மதியம் 3.30 மணியளவில் வானில் கருமேகங்கள் ஒன்று திரண்டு காணப்பட்டதுடன், குளிர்ந்த காற்றும் வீசியது.

ஆலங்கட்டி மழை

இந்த நிலையில், மதியம் 4 மணிக்கு பின்பு ராஜாஜிநகர், விஜயநகர், மெஜஸ்டிக், மல்லேசுவரம், ஜெயநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பின்னர் திடீரென்று ஆலங்கட்டி மழை சில நிமிடங்கள் பெய்தது. மழையுடன் சாலைகளில் ஆலங்கட்டிகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தது. அந்த ஆலங்கட்டிகளை பார்த்த பெங்களூரு வாசிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பலர் தங்களது வீடுகள் முன்பு விழுந்த ஆலங்கட்டிகளை கையில் எடுத்து ஆச்சரியப்பட்டனர். அதுபோல, சிறுவர், சிறுமிகள் ஆலங்கட்டிகளை எடுத்து விளையாடினார்கள்.

நேற்று மதியம் பெய்ய தொடங்கிய மழை இடி–மின்னலுடன் இரவு வரை நீடித்தது. இதனால் நகரில் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வேலை முடிந்ததும் தங்களது வாகனங்களில் வீட்டிற்கு திரும்ப முடியாமல் சிரமப்பட்டார்கள். பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

மேலும் செய்திகள்