13. சுற்றுலா நட்பு உள்ளம்

பயணம் வேறு, சுற்றுலா வேறு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கல்லாக இருக்கும் மனதை கடற்பஞ்சாக மாற்றிக்கொண்டு புதிய கிரகத்தை நுகர்வதுபோல அணுவணுவாக ரசிக்கும்போது ஏற்படும் அனுபவமே பயணத்தைச் சுற்றுலாவாக உயர்த்துகிறது.

Update: 2017-04-30 08:42 GMT
யணம் வேறு, சுற்றுலா வேறு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கல்லாக இருக்கும் மனதை கடற்பஞ்சாக மாற்றிக்கொண்டு புதிய கிரகத்தை நுகர்வது போல அணுவணுவாக ரசிக்கும்போது ஏற்படும் அனுபவமே பயணத்தைச் சுற்றுலாவாக உயர்த்துகிறது. பிறந்த இடத்தையும், வளர்ந்த இடத்தையும் வழியெல்லாம் தூக்கிக்கொண்டு செல்பவர்களால் சுற்றுலாவைச் சுவைக்க முடியாது.

சில நாடுகளில் பார்க்க நிறைய இடங்கள் இருக்கும். அருவிகள் வழிந்தோடிச் செல்லும். குருவிகள் வான்வெளியெங்கும் பறக்கும். பூமி உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டு பரிமளிக்கும். அழகிய கடற்கரை கோல மாவைப்போல் தூய்மையாய் இருக்கும். பார்க்கிற திசைகளிலெல்லாம் வண்ணப் பூக்கள் எண்ணத்தைக் கவரும். அழகான மலைச்சாரல்களும், ஆழமான பள்ளத்தாக்குகளும் கண்களைக் குளுமையாக்கும்.

இவையெல்லாம் இருந்தாலும் அங்கு சுற்றுலாப் பயணிகள் சொற்பமாகவே தென்படுவார்கள். திங்கள் முழுவதும் இருக்கலாம் என ஞாயிற்றுக்கிழமை வந்தவர்கள் திங்களன்றே திரும்பிவிடுவார்கள். இன்னும் சிலருக்கோ ஏன் வந்தோம் என்ற வேதனை தங்கும்வரை நீடிக்கும். கசந்த நினைவுகளைச் சுமந்த இதயத்தோடு செல்வார்கள். மகிழ்ச்சியாய் இருக்கலாம் என்ற மனப்பான்மையோடு வந்தவர்கள் வருத்தத்தை வரவு வைத்துக்கொண்டு துக்கம் தொண்டையிலடைக்க தொய்வோடு பயணிப்பார்கள்.

சுற்றுலா என்பது இடங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. சுற்றி இருக்கிற மக்களும், வழிநெடுக வாய்க்கிற வசந்த அனுபவங்களுமே சுற்றுலாவை சொர்க்க பூமியாக மாற்றுகின்றன. பாலைவனத்தில் பயணித்தாலும் எதிர்கொள்ளும் மக்கள் ஈர இதயத்தோடு இருந்தால், வீசுகிற மணற்காற்றும் மலர்க்காற்றாய் மனதை வருடும். தூசியும் மயில் தோகையாய் உடலுக்கு ஒற்றடம் கொடுக்கும். குளிர்ந்த பிரதேசத்திலும் கொதிப்பேற்றுகிற அளவிற்குப் பேசுகிற உள்ளூர் மக்கள் இருந்தால் ஊதக்காற்றிலும் உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றும்.

வருகிற விருந்தினர்கள் தங்கள் ஊரைவிட நாகரிகமான மக்கள் நிறைந்த பகுதி என்று நினைக்கும் வகையில் நடக்கும் ஊரே நல்ல சுற்றுலாத்தலம். ‘அந்நிய மண்’ என்று அறியாதவண்ணம் அன்னியோன்யம் காட்டுகிற மக்களே நம் உறவினர்கள். அழையாமல் வந்த விருந்தினராக அவர்களைக் கருதினால் வாய்மொழி விளம்பரம் மூலம் எண்ணிக்கை சுருங்கும். அது பலரது வயிற்றில் சுருக்கங்கள் விழுவதற்கு சுருக்கொப்பம் இடும்.

இனிய புன்னகை, மலர்ந்த முகம், வாய் நிறைய உபசரிப்பு, கனிவு காட்டும் கண்கள், பண்பு தெறிக்கும் மொழி, நேர்மை ஒளிரும் நடவடிக்கை, அக்கறை சேர்ந்த வழிகாட்டுதல், அன்பு கலந்த மரியாதை என அனைத்தும் தென்படுகிறவர்கள் அனைவரிடமும் தெரிய ஆரம்பித்தால் உணவில் கொஞ்சம் உப்பு குறைந்தாலும் உணர்வில் உவப்பு குறையாது. தேநீரில் சிறிது இனிப்பு குறைந்தாலும் பரிமாறுபவர்கள் சிரிப்பில் அது சரிக்கட்டப்படும். ஒதுக்கப்பட்ட அறையில் வசதி குறைந்தாலும் அசதி தராத தூக்கம் உபசரிப்பால் அமையும்.

சுற்றுலா நட்பு மனப்பான்மை ஒருமித்த உள்ளுணர்வில் உதயமாக வேண்டும். வருகிற வெளிநாட்டுப் பயணிகள் நம் நாட்டைப் பற்றிய நன்மதிப்பையும் அவர்கள் கைப்பையில் எடுத்துச் செல்கிறார்கள் என்கிற புரிதல் அனைவருக்கும் அவசியம். இடங்களைச் சுட்டும் பெயர்ப்பலகைகளிலிருந்து அது உண்டாகிறது.

பேருந்தில் அவர்களுக்கு இருக்கையை ஒதுக்கி நாம் நிற்கும்போது நம் நாடே நம் நடத்தைக்காக எழுந்து நின்று கைதட்டுகிறது என்பதை உணர வேண்டும். அந்நியர் ஒருவர் வழிகேட்டால் அக்கறை எடுத்துக்கொண்டு அவருக்குப் புரியும் வகையில் விளக்குவது அவசியம். அவர்களிடம் தரமான பொருட்களையே தவறாமல் விற்க வேண்டும். இவர் களுக்கு ‘அடக்க விலை’ என்ன என்று தெரியவா போகிறது என அடுக்காத விலையைச் சொன்னால் அடுத்து அவற்றை விற்க முடியாமல் போய்விடும் என்பதை உணர வேண்டும்.

இப்போதெல்லாம் இணையம் இருப்பதால் எந்த ஊருக்குச் சென்றாலும் அதைப்பற்றி அக்குவேறு ஆணிவேறாக அலசியபிறகே மக்கள் செல்கிறார்கள். முகநூலில் கசப்பு அனுபவங்களைத் தாட்சண்யமில்லாமல் பகிர்ந்து கொள்கிறார்கள். எந்தப் பொருள் என்ன விலை என்பது அவர்களுக்கு அப்படியே அத்துப்படி.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது பொன்முட்டையிடும் வாத்தை பொரியலாக்கியதைப்போல பேராசையின் வெளிப்பாடு. ஒரு சுற்றுலாப்பயணி அவர் ஊருக்குச் சென்றதும் நூறு சுற்றுலாப் பயணிகளை நம் ஊருக்கு அனுப்பும் முகவராக செயல்படுகிறார்.

உடைமைகளுக்குப் பாதுகாப்பு, உயிருக்கு உத்தரவாதம், பணத்திற்கு மதிப்பு, நினைவுக்கு முத்திரை ஆகியவற்றை எதிர்பார்த்து பயணிகள் வருகிறார்கள். உயரமான கட்டிடங்களுக்கு முன்பு அற்ப மனிதர்களைச் சந்தித்தால் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படவே செய்கிறது.

சுற்றுலா நட்பு மனப்பான்மை, இறங்குகிற தொடர்வண்டி நிலையத்திலேயே தொடங்கிவிடுகிறது. அங்கு அவர்கள் பொருட்களைச் சுமக்கிற போர்ட்டர்கள் நம் நாட்டைப்பற்றிய முதல் எண்ணத்தை முன்மொழிகிறார்கள். பிறகு வாடகை வாகனங்கள் அதை வழிமொழிகின்றன. தங்குகிற இடம் அவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கு தலைமை தாங்குகிறது. உணவும், உபசரிப்பும் முன்னிலை வகிக்கின்றன. வாங்குகிற பொருட்கள் வரவேற்புரை வாசிக்கின்றன. கழிவறை வசதிகள் சிறப்புரை நிகழ்த்துகின்றன. நாணயமான நடத்தை நாட்டுப்பண் இசைக்கிறது.

சில நாடுகள் அளவில் குறைவாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதில் முதலிடம் வகிக்கின்றன, சுண்டல் விற்றுக்கொண்டே மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணவனைப்போல. அப்பாக்கள் தப்பாமல் சேமித்துவைத்த சொத்தை வாரிசுகள் சூறையாடுவதைப்போல, பழம்பெருமை பல்வேறு கிளைகளாக விரிந்திருந்தும் கோட்டைவிடுகிற நாடுகளும் உண்டு.

சில நாடுகளுக்கு முக்கிய வருமானமே சுற்றுலாதான். அங்கு சுற்றிப்பார்க்கச் சென்றவர்கள், சற்றே இளைப்பாறலாம் எனப் பயணப்பட்டவர்கள் அந்தப் பண்பாட்டைப் பார்த்து அங்கேயே தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்துவிடு கிறார்கள். அது அந்நிய முதலீடு அல்ல, கண்ணிய முதலீடு. அதனால் பெருகுவது அந்நியச் செலாவணி.

விடுதலை பெறுகிறபோது தாக்குப்பிடிப்போமா என்று விழியெல்லாம் கண்ணீரோடு அந்த இரவைக் கழித்தவர்கள் சிங்கப்பூர்வாசிகள். இன்று ஆசிய நாடுகளில் அதிகம்பேர் சுற்றுலா செல்லும் இடமாக அது இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு அங்கு பயணிகள் வரத்து அதிகரிப்பு. அந்த ஊர் விமான நிலையத்திற்கு ஆலோசகராக இருந்தது ‘ஏர் இந்தியா’. இப்போது தவறாமல் அதை எல்லா ஆண்டும் தலைசிறந்த விமானநிலையமாக பயணிகள் தேர்வு செய்கிறார்கள்.

சிங்கப்பூர் தெருக்களில் ஒரு காகிதச்சுருளைக்கூட காண முடியாது. அங்கும் நெகிழித்தாள்கள் உண்டு. ஆனால் குப்பைகள் கண்ணில் படுவதில்லை. வாகனங்கள் அத்து மீறுவது இல்லை. பயணிகளுக்குப் பரிவோடு உதவும் அதிகாரிகளும், உள்ளூர்வாசிகளும் நம் இதயத்தில் இடதுகைரேகையைப் பதிக்கிறார்கள். சின்ன ஊரை எப்படி சிலிர்ப்புக்குண்டான இடமாக மாற்றுவது என்பதை அங்கிருக்கும் அத்தனைபேரும் வகுப்பெடுக்கிறார்கள். அங்கே சுற்றுலா நாடு என்ற வாசகம் இல்லை. நாட்டின் பெயரே வாசகமாக வாசிக்கப்படுகிறது.

சிங்கப்பூரை, இந்தியர்கள் பயணம் மேற்கொள்வதற்கு அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். அருகில் இருப்பதும் ஒரு காரணம். ஆசிய நாடாக இருப்பது இன்னொரு காரணி. நம் உணவும், நம் மக்களும் அதிகம் தென்படுவதால் தமிழகத்தின் நீட்சியாக சிங்கப்பூர் தெரிகிறது.

முன்னணியிலே இருக்கிறோம் என்று அவர்கள் திருப்தி யடைந்து விடுவதில்லை. ஓடிக்கொண்டே இருந்தால்தான் ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்க முடியும் என்பது வர்த்தக உலகின் கோட்பாடு. திரைப்படங்கள் சிங்கப்பூரை நோக்கி பலரையும் ஈர்க்கும் மாயையைச் செய்தன. நாயகர்கள் தோன்றும் காட்சிகளில் இருக்கும் அழகிய பின்னணி ரசிகர்களைச் சுண்டி இழுத்தன. ஒருகாலத்தில் எண்ணற்ற படங்கள் சிங்கப்பூரை மையமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டன. சிங்கப்பூருக்குப் போக முடியாவிட்டாலும், இந்தப் படத்தையாவது பார்ப்போமே என்கிற ஆசையில் எண்ணற்றோர் திரையரங்குகளை நிறைத்தனர்.

இப்போது கடவுச்சீட்டும், நுழைவுச்சீட்டும் எளிதாகக் கிடைப்பதால், அவ்வூரை மையமாகக்கொண்டு படங்கள் வருவதில்லை. மீண்டும் இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் எடுக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் சுற்றுலா வாரியம் சற்றுத் தூக்கலாகவே அக்கறை காட்டுகிறது. உடனடியாக அனுமதி, படப்பிடிப்பு நடத்த ஒத்தாசை, குழுவினருக்கு தங்க வசதி என அனைத்தையும் தந்து திரைப்படங்களை எடுப்பவர்களை ஊக்குவிப்பதாக உரக்கக் கூவி வருகிறது.

மகத்தான இடங்களை திரைப்படம் எடுக்க அனுமதித்தால் அவற்றை சீர்செய்ய முடியாதபடி அசுத்தப்படுத்துகிற ஒன்றிரண்டு நிகழ்வுகளும், அதனால் எழும் ஆர்வலர்களின் எதிர்ப்புக் குரல்களும், பாரம்பரிய இடங்களை பத்திரப்படுத்துவதைக் குறித்து நம்மை ஆழமாக சிந்திக்க வைத்திருக்கும் இச்சூழலில், சிங்கப்பூரின் அறிவிப்பு நம் சிந்தனையைத் தூண்டுகிறது.

எப்போதும் சுத்தமாக இருக்கும் இடத்தில் யாரும் குப்பைபோட விரும்புவதில்லை என்பதே அனுபவம் சொல்லும் அரிய பாடம்.

(செய்திகள் தொடரும்)


சுற்றுலாவின் வெற்றி

ரியல் எஸ்டேட்டில் இடத்தை விற்கிறோம், பங்குச்சந்தையில் அனுமானத்தை கச்சாப்பொருளாக்குகிறோம், மளிகைக்கடையில் பலசரக்கை விநியோகிக்கிறோம், ஆயுள்காப்பீட்டில் நிச்சயமற்ற தன்மையை முதலீடாக்குகிறோம், திரைப்படத்தில் பொழுதுபோக்கை முதன்மைப்படுத்துகிறோம், மருத்துவமனையில் நலவாழ்வை உறுதி செய்கிறோம், சுற்றுலாவில் அனுபவத்தை சந்தைப்படுத்துகிறோம். எனவே, மறுபடியும் வருகிறவர்களுக்கும் புதிய அனுபவத்தைத் தருவதில்தான் சுற்றுலாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. 

மேலும் செய்திகள்