4 குடிசைகளில் பயங்கர தீவிபத்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

ஆலங்காயம் அருகே ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 4 குடிசைகள் தீயில் எரிந்தன. இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் வேன் சேதமானது.

Update: 2017-05-02 23:15 GMT
வாணியம்பாடி,

ஆலங்காயத்தை அடுத்த பங்கூர் என்ற இடத்தில் குடிசை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் கூலித்தொழில் செய்து பிழைத்து வருகின்றனர். இதில் செல்வம் என்பவர் துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார். இவர்களது வீட்டின் மேல் மின்வயர்கள் செல்கின்றன. இந்த நிலையில் வயர்கள் உரசியதில் பற்றிய தீ செல்வம் வீட்டின் குடிசையில் பிடித்ததாக கூறப்படுகிறது.

அடுத்த வினாடியே தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து தீயணைக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகத்தால் தீ அருகே வசிக்கும் ராஜேசுவரி, குப்பன், மல்லிகா ஆகியோரது குடிசை வீடுகளுக்கும் பரவி எரிய தொடங்கின. அத்துடன் அந்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனிலும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் 4 குடிசைகளில் இருந்த டி.வி., பீரோ, கட்டில், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்ததோடு வேனின் ஒரு பகுதியும் சேதமானது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

தீ விபத்து நடந்தவுடன் பொதுமக்கள் ஆலங்காயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தாமதமாக வந்ததே சேதமதிப்பு அதிகரிக்க காரணம் என பாதிக்கப்பட்டோர் குற்றம்சாட்டினர். இந்த விபத்தில் ரூ.10 லட்சம் வரை சேதமானதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து குடிசை உரிமையாளர்கள் கூறுகையில், “பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழை தொழிலாளர்கள். அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய பொருட்கள் எரிந்து விட்டன. எனவே எங்களுக்கு அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்