கொடைக்கானலில் பலத்த மழை எதிரொலி: பழைய அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்தது

பலத்த மழை எதிரொலியாக கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்தது.

Update: 2017-05-03 22:15 GMT

கொடைக்கானல்,

கொடைக்கானலில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடும் வறட்சி நிலவியது. இதன்காரணமாக கொடைக்கானலுக்கு குடிநீர் வழங்கும் புதிய அணை வறண்டது. மேலும் பழைய அணையின் நீர்மட்டமும் குறைந்தது. இதனால் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டு நிலவி வந்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறியது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக வெள்ளிநீர்வீழ்ச்சி, பியர்சோழா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த மழையால் கொடைக்கானலுக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் 3 அடியில் இருந்து 4 அடியாக உயர்ந்தது.

மழையளவு விவரம்

நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாட்டிற்கு இந்த மழையால் தற்காலிகமாக தீர்வு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கோடை விவசாயத்திற்கும் இந்த மழை ஏற்றதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை 24 மணி நிலவரப்படி அப்சர்வேட்டரியில் 31.3 மி.மீட்டர் மழையும், போர்ட் கிளப்பில் 37.5 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்