கோடநாடு கொலை வழக்கில் தொடர்பு: கைதான 2 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

கோடநாடு கொலை வழக்கில் தொடர்பு: கைதான 2 பேரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Update: 2017-05-03 23:00 GMT

கோத்தகிரி,

கேரள மாநிலம் அரக்காடு காவல் நிலைய போலீசார் ஒரு மோசடி வழக்கு தொடர்பாக திருச்சூர் மாவட்டம் இன்அரிகோடு என்ற பகுதியை சேர்ந்த ஜிதின் ராய் (வயது 19), வயநாடு பகுதியை சேர்ந்த ஜம்ஷீர் அலி (32) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிதின் ராய், ஜம்ஷீர் அலி ஆகியோரை நீலகிரி மாவட்ட போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மலப்புரம் சென்று அங்குள்ள கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

 அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, ஜிதின் ராய் மற்றும் ஜம்ஷீர்அலி ஆகியோரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். அதன்பேரில் போலீசார் அவர்கள் 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்